இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 27-11-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 27 Nov 2025 3:32 PM IST
உருவானது டித்வா புயல்; நவம்பர் 30-ல் கரையை கடக்க வாய்ப்பு
சென்னைக்கு தெற்கு தென்கிழக்கே தற்போது 700 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ள இந்த புயல், வட தமிழகம், புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் கரையை கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், பலத்த தரை காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- 27 Nov 2025 3:01 PM IST
ஆசிரியை கொலை: சட்டம் - ஒழுங்கை காப்பதில் மு.க.ஸ்டாலின் அக்கறை காட்ட வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலை பள்ளியில் தற்காலிக தமிழ் ஆசிரியராக பணியாற்றி வந்த ரமணி என்ற ஆசிரியை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 20-ம் தேதி மதன் என்பவரால் பள்ளி வளாகத்திலேயே கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். அப்போது தமிழ்நாட்டில் ஆசிரியர்களுக்கு எதிரான வன்முறைகளை சகித்துக் கொள்ள முடியாது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் வீராவேசம் காட்டினார்கள். ஆனால், சரியாக ஓராண்டு கழித்து தஞ்சாவூரில் இன்னொரு ஆசிரியை படுகொலை செய்யப்பட்டுள்ளார். அதை தடுக்க திமுக அரசால் முடியவில்லை.
தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு என்பதைத் தேடினால் கூட கண்டுபிடிக்க முடியவில்லை. குறிப்பாக பெண்களும், குழந்தைகளும் வெளியில் சுதந்திரமாக நடமாட முடியவில்லை.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாய உலகில் இருந்து எதார்த்த உலகிற்கு வர வேண்டும். தமிழ்நாட்டு மக்கள் தினமும் அனுபவிக்கும் கொடுமைகளை பார்க்க வேண்டும். ஆட்சியில் இருக்கப் போகும் இன்னும் சில நாள்களுக்காவது தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
- 27 Nov 2025 2:56 PM IST
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மறுநாள் திமுக எம்.பி.க்கள் கூட்டம்
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் டிசம்பர் 1ம் தேதி முதல் 19ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நடைபெறும் இந்த குளிர்கால கூட்டத் தொடரில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்க்கட்சிகள் கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருப்பப் பணிகளுக்கு மத்தியில் நாடாளுமன்றம் கூடுகிறது.
இந்தநிலையில், வருகிற 29ம் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- 27 Nov 2025 1:52 PM IST
டிசம்பர் 8ம் தேதி கூடுகிறது காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம்
காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 46வது கூட்டம் வரும் டிசம்பர் 8ம் தேதி டெல்லியில் கூடுகிறது.
மேகதாது விவகாரத்தில் கர்நாடகாவின் திட்ட அறிக்கை மீதான கருத்துகளை, மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தெரிவிக்கலாம் என சுப்ரீம்கோர்ட்டு சமீபத்திய உத்தரவில் கூறியுள்ளதால், எதிர்வரும் இக்கூட்டம் முக்கியமானதாக கருதப்படுகிறது.
- 27 Nov 2025 1:43 PM IST
அடுத்த 2 நாட்களுக்கு அதி கனமழை - வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை
தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்டங்களுக்கு நாளை (நவ.,28) ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் ஆகிய 6 மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் நாளை மறுநாள் (நவ.,29) அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட தகவல் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- 27 Nov 2025 1:16 PM IST
த.வெக.வில் இணைந்தது ஏன்? செங்கோட்டையன் பரபரப்பு விளக்கம்
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக கட்சியில் இணைந்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறுகையில், “அதிமுகவில் புரட்சி தலைவரால் அடையாளம் காணப்பட்டவன் நான். அதிமுக உருவான போது எம்ஜிஆர் உடன் சென்றவன் நான். புரட்சி தலைவி ஜெயலலிதாவின் பாராட்டையும் பெற்றவன் அதிமுக மீண்டும் ஒன்றனைய வேண்டும் என்று வலியுறுத்தினோம் .அது நடக்கவில்லை.என்னை திட்டமிட்டு வெளியேற்றியவர் எடப்பாடி பழனிசாமி.நான் தவெகவில் இணைந்ததற்கு காரணம் உள்ளது. தமிழகத்தில் மாற்றம் வேண்டும். தமிழ்நாட்டில் தூய்மையான அரசியலை முன்னெடுத்துள்ளார் விஜய்” என்று கூறினார்.
- 27 Nov 2025 1:14 PM IST
தஞ்சை அருகே பள்ளி ஆசிரியை படுகொலை: 13 ஆண்டு காதலன் செய்த வெறிச்செயல்
ஆசிரியைக்கு வேறொரு நபருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், கோபத்தில் அவரை காதலன் கொலை செய்ததாக கூறப்படுகிறது.
- 27 Nov 2025 1:13 PM IST
கல்லூரி மாணவியை ரெயிலில் தள்ளிவிட்டு கொன்ற வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை குறைப்பு
கல்லூரி மாணவியை ரெயிலில் தள்ளிவிட்டு கொன்ற வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை குறைக்கப்பட்டுள்ளது.
- 27 Nov 2025 12:36 PM IST
இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்: இலங்கைக்கு சுனாமி எச்சரிக்கை
இந்தோனேஷியாவில் ரிக்டர் அளவுகோலில் 6.6 அலகுகளாக நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கம் காலை 10.26 மணிக்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமக இலங்கை கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- 27 Nov 2025 12:28 PM IST
அடுத்த 3 மணி நேரத்தில் உருவாகிறது புயல்.. வானிலை ஆய்வு வெளியிட்ட முக்கிய தகவல்
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, அடுத்த 3 மணி நேரத்தில் புயலாக வலுவடையக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


















