
உருவானது டித்வா புயல்; நவம்பர் 30-ல் கரையை கடக்க வாய்ப்பு
சென்னைக்கு தெற்கு தென்கிழக்கே தற்போது 700 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ள இந்த புயல், வட தமிழகம், புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் கரையை கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், பலத்த தரை காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.






