இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 01-12-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 1 Dec 2025 10:59 AM IST
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இந்த நிலையில், எஸ்.ஐ.ஆர். குறித்து மக்களவையில் விவாதம் நடத்த வேண்டும் என தி.மு.க. நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி ஒத்திவைப்பு நோட்டீஸ் அளித்துள்ளார்.
- 1 Dec 2025 10:57 AM IST
நாடாளுமன்றத்தில் எந்த விஷயம் பற்றியும் விவாதிக்கலாம்: செய்தியாளர்கள் சந்திப்பில் பிரதமர் மோடி பேச்சு
குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி, வருகிற 19-ந்தேதி வரை நடக்கிறது. இதனை முன்னிட்டு பல்வேறு கட்சிகளின் எம்.பி.க்களும் நாடாளுமன்றத்திற்கு இன்று வருகை தந்துள்ளனர். இந்நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினார்.
அப்போது அவர் பேசும்போது, இந்த குளிர்கால கூட்டத்தொடர் வழக்கம்போல் நடக்கும் ஒரு சடங்கு அல்ல. பீகார் சட்டசபை தேர்தலில் பெண்களின் வாக்குப்பதிவு அதிகரித்து உள்ளது. கூடுதல் வாக்குப்பதிவு என்பது ஜனநாயகம் வலுப்பெறுவதற்கான அடையாளம்.
ஆனால் இந்த தேர்தல் முடிவுகளை சிலரால் பொறுத்து கொள்ள முடியவில்லை. பீகார் தேர்தல் தோல்வியை மனதில் வைத்து கொண்டு எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட கூடாது. இளம் எம்.பி.க்கள் மற்றும் முதல்முறை எம்.பி.க்கள் அவையில் கூடுதலாக பேச முன்வர வேண்டும் என்றார்.
- 1 Dec 2025 10:21 AM IST
வாட்ஸ் அப் பயன்படுத்த ஆக்டிவ் சிம் கார்டு கட்டாயம் - மத்திய அரசு அதிரடி
வாட்ஸ் அப் என்பது தற்போது தவிர்க்க முடியாத சமூக வலைத்தளங்களில் ஒன்றாக மாறிவிட்டது. உலகம் முழுவதும் பல கோடி பேர் வாட்ஸ் சேவையை பயன்படுத்துகிறார்கள். குறுஞ்செய்தி அனுப்புவது மட்டும் இன்றி தற்போது வாட்ஸ் அப் வழியாக அழைப்புகளையும் மேற்கொள்ள முடியும். வாட்ஸ் அப்களை டெஸ்க்டாப்பில் அதாவது கணிணி வழியாகவும் இணைத்து பயன்படுத்தலாம். ஆனால், இந்த வசதியை பயன்படுத்தி பல்வேறு மோசடிகளும் அரங்கேறுவதாக சமீப காலமாக புகார்கள் அதிகரித்தவண்ணம் உள்ளன. இதனை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு, வாட்ஸ் அப் நிறுவனத்திற்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
- 1 Dec 2025 10:20 AM IST
ஆபரேசன் சாகர்பந்து... இலங்கையில் சிக்கி தவித்த இந்திய பயணிகள் பாதுகாப்பாக மீட்பு
துபாயில் இருந்து 150 தமிழர்கள் உள்ளிட்ட 300 பயணிகளுடன் விமானம் ஒன்று இந்தியாவுக்கு வந்து கொண்டிருந்தது. இலங்கை வழியே இந்தியா வர இருந்த விமானம், இலங்கையின் கொழும்பு நகரில் உள்ள பண்டாரநாயகே சர்வதேச விமான நிலையத்தில் சில நாட்களுக்கு முன்பு தரையிறங்கியது. எனினும், வங்க கடல் மற்றும் இலங்கையை ஒட்டியுள்ள பகுதிகளில் உருவான டிட்வா புயல் எதிரொலியாக கனமழை பெய்தது.
இதனால், இலங்கையில் விமானம் மற்றும் ரெயில் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதனால், இந்தியர்களை ஏற்றி வந்த விமானம் புறப்படுவதில் சிக்கல் ஏற்பட்டது. 150 தமிழர்கள் உள்ளிட்ட 300 பயணிகளும் கடந்த 5 நாட்களாக கொழும்பு விமான நிலையத்திலேயே சிக்கி தவித்தனர்.
- 1 Dec 2025 10:18 AM IST
டிட்வா புயல், கனமழை எதிரொலி; தமிழகத்தில் இளம்பெண் உள்பட 5 பேர் பலி
வங்க கடலில் உருவான டிட்வா புயல் இலங்கையை புரட்டி போட்டதுடன், தமிழகத்திலும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து, பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. இதில், தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே ஆலமன்குறிச்சியை சேர்ந்த முத்துவேல் (வயது 56) என்பவர் கூலித்தொழிலாளியாக உள்ளார். இவருடைய மனைவி சீதா(45), இவர்களுடைய மகள்கள் கனிமொழி(21), ரேணுகா(20). இளைய மகள் ரேணுகா டிப்ளமோ அக்ரி படித்து முடித்து விட்டு சென்னையில் வேலை பார்த்து வந்தார்.
கனமழையால் இவர்களது வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் ரேணுகா உள்ளிட்ட 4 பேரும் சிக்கிக்கொண்டனர். உடனே அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். எனினும், சிகிச்சை பலனின்றி ரேணுகா உயிரிழந்து விட்டார். இதேபோல் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள செம்பதனிருப்பை சேர்ந்த பிரதாப் (வயது 19) என்ற வாலிபர், பலத்த மழையால் அறுந்து விழுந்த மின்கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி பலியானார்.
- 1 Dec 2025 9:54 AM IST
மீண்டும் உச்சத்தை நோக்கி தங்கம் விலை... ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்தை தாண்டியது
தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடனேயே போக்கு காட்டி வருகிறது. முதலீட்டாளர்களின் கவனம் ஒரு நாள் தங்கத்தின் பக்கமும், மறுநாளில் பங்கு சந்தைகள் பக்கமும் மாறி மாறி செல்வதால் இந்த நிலை நீடிக்கிறது. கடந்த அக்டோபர் மாதம் 17-ந்தேதி ஒரு சவரன் ரூ.97,600 என்ற உச்சத்துக்கு சென்று, அதே மாதம் 28-ந்தேதி ஒரு சவரன் ரூ.88,600 என்ற நிலைக்கு வந்தது.
கடந்த சில நாட்களாக தங்கம் விலை மீண்டும் உச்சத்தை நோக்கி பயணித்து வருகிறது. நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.140-ம், சவரனுக்கு ரூ.1,120-ம் அதிகரித்து, ஒரு கிராம் தங்கம் ரூ.11,980-க்கும், சவரன் ரூ.95,840-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.
- 1 Dec 2025 9:45 AM IST
அரையாண்டு தேர்வு வினாத்தாளை பதிவிறக்கம் செய்வதற்கான வழிகாட்டி நெறிமுறைகள்- பள்ளிக்கல்வித்துறை
அரையாண்டு தேர்வு வருகிற 10-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை நடைபெற இருக்கிறது. தேர்வை எதிர்கொள்ள மாணவ-மாணவிகள் தயாராகி வருகின்றனர். தேர்வுக்காக வினாத்தாள் தயாரிக்கும் பணியிலும் பள்ளிக்கல்வித்துறை மும்முரமாக ஈடுபட்டு இருக்கிறது. அந்தவகையில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கான வினாத்தாளை பதிவிறக்கம் செய்வது தொடர்பான வழிகாட்டி நெறிமுறைகளை தொடக்கக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-
1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மாவட்டக்கல்வி அலுவலர்களுக்கு கல்வி மேலாண்மை தகவல் அமைப்பு (எமிஸ்) தளத்தில் இன்று (திங்கட்கிழமை) முதல் நாளை மறுதினம் (புதன்கிழமை) வரை பதிவிறக்கம் செய்து, ஒவ்வொரு பள்ளிகளுக்கும் வகுப்பு, பாடம், பயிற்றுவழி வாரியாக பிரித்து, உறையிடப்பட்ட கவரில் வைத்து தேர்வு நடைபெறுவதற்கு 2 நாட்களுக்கு முன்னதாக அனுப்பி வைக்க வேண்டும். தலைமை ஆசிரியர்கள் அதனை பாதுகாப்பாக வைத்து, தேர்வு நடைபெறும் தினத்தன்று வினாத்தாளை எடுத்து பயன்படுத்த வேண்டும்.
- 1 Dec 2025 9:44 AM IST
ஒரு மாசமா மாதம்பட்டி ரங்கராஜை காணவில்லை.. - ஜாய் கிரிசில்டாவின் பரபரப்பு பதிவு
ஜாய் கிரிசில்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு பரபரப்பை ஏற்படுத்தியது. அதில், "காணவில்லை.. ராகா ரங்கராஜ்- வின் அப்பா மாதம்பட்டி ரங்கராஜுவை கடந்த 1 மாதமாக காணவில்லை டிஎன்ஏ டெஸ்ட்-க்கு தலைமறைவாக உள்ளார். இவரை இவண்டில் (event) பார்த்தால் உடனே எனக்கு மெசேஜ் (டிஎம்) செய்யவும்.
என்னை நீங்கள் ஏமாற்றலாம், ஊரை நீங்கள் ஏமாற்றலாம், சுற்றி இருக்கிறவர்கல ஏமாற்றலாம் ஆனால் உங்கள் மனசாட்சியையும் கடவுளையும் நீங்கள் ஏமாற்ற முடியாது. “அரசன் அன்று கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும்” செய்த செயல்களுக்கான பலனை நிச்சயம் நீங்கள் அனுபவித்தே ஆக வேண்டும்..." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- 1 Dec 2025 9:41 AM IST
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைவு
பாரத், இந்துஸ்தான், இந்தியன் ஆயில் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வீடுகளுக்கு 14.20 கிலோ எடையிலும், வணிக பயன்பாட்டுக்கு 19 கிலோ எடையிலும், சமையல் கேஸ் சிலிண்டர்களை நாடு முழுவதும் வினியோகம் செய்து வருகின்றன.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கேஸ் சிலிண்டர்களின் விலைகளை நிர்ணயித்து வருகின்றன. இதில் சமையல் கேஸ் சிலிண்டர்களின் விலைகளை மாதத்தின் முதல் தேதியில் மாற்றி அமைத்து வருகிறது.
- 1 Dec 2025 9:38 AM IST
புதிய சொத்துகள் சேரும்... இன்றைய ராசிபலன் - 01.12.2025
சிம்மம்
இன்று சந்திராஷ்டமம் என்பதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இன்று முக்கியமான விஷயமாக இருந்தால் மட்டும் பயணம் மேற்கொள்ளளாம். புதிய முயற்சிகள் வேண்டாம். இன்று இறைவனை பிரார்த்தித்து கொள்வது நல்லது. யாரிடமும் வாக்குவாதம் செய்வது தவிர்ப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை















