இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 01-12-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 1 Dec 2025 2:05 PM IST
கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில் மழை நீரை சேகரிக்கும் வகையில் குளங்கள் அமைக்க ஐகோர்ட்டு உத்தரவு
சென்னை கிண்டியில் ரேஸ் கிளப்பிற்கு வழங்கப்பட்ட நிலத்துக்கான குத்தகையை ரத்து செய்த தமிழக அரசு, மீட்கப்பட்ட இடத்தில் 118 ஏக்கர் பரப்பளவில் தோட்டக்கலைத் துறையின் சார்பில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக பசுமைவெளி பூங்கா மற்றும் மாநகராட்சி சார்பில் மழை நீரை சேமிக்க நான்கு குளங்கள் என மழைநீர் சேகரிப்பு திட்டமும் அமல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது.
சென்னை போன்ற பெரு நகரங்களில் நிலம் என்பது மிகவும் பற்றாக்குறையாக உள்ள நிலையில், அரசு நிலத்தை குறிப்பிட்ட தனிநபர்கள், தங்களது தனிப்பட்ட தேவைகளுக்காக பயன்படுத்த அனுமதிப்பது மக்களின் நம்பிக்கையை சீர்குலைப்பது போலாகும் எனவும் கூறிய நீதிபதிகள், தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளனர்.
- 1 Dec 2025 1:11 PM IST
ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது - செல்வப்பெருந்தகை வாழ்த்து
“சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு திரைத்துறையில் 50 வருடங்களை நிறைவு செய்ததற்காக கோவாவில் நடந்த இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
50 வருடங்களை அவர் நிறைவு செய்திருந்தாலும் இப்போதும் சலிப்பில்லாமல் உழைத்துக்கொண்டிருக்கிறார். வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றிருக்கும் ரஜினிகாந்தை வாழ்த்துகிறோம். இன்னும் பலப்பல விருதுகளைப் பெற்று திரையுலகிலும் புகழுடன் வாழ விரும்புகிறோம்.”
- 1 Dec 2025 1:06 PM IST
எதிர்க்கட்சிகள் அமளி: மக்களவை பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு
அவையில் எஸ்.ஐ.ஆர். பணிகள், டெல்லி காற்று மாசுபாடு, நெல் ஈரப்பதம், கல்வி நிதியை அதிகரிப்பது உள்ளிட்ட விவகாரங்களை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்பி வருகின்றன. இதுபற்றி விவாதம் நடத்த கோரிக்கை வைக்கப்பட்டது. எதிர்க்கட்சிகளின் கடும் அமளியால், மக்களவை மதியம் 12 மணி வரை முதலில் ஒத்திவைக்கப்பட்டது. இதன்பின்னர் அவை 12 மணிக்கு மீண்டும் கூடியதும் எஸ்.ஐ.ஆர். பணிகள் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் மீண்டும் அமளியில் ஈடுபட்டன. இதனால், மக்களவை பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
- 1 Dec 2025 12:52 PM IST
வரலாறு காணாத உச்சம் கண்ட பங்கு சந்தைகள்
மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் வரலாறு காணாத வகையில் சென்செக்ஸ் குறியீடு உச்சமடைந்து காணப்பட்டது. இதன்படி, மும்பை பங்கு சந்தையில் 452.35 புள்ளிகள் உயர்ந்து 86,159.02 புள்ளிகளாக உள்ளது.
இதனால், அதானி போர்ட்ஸ், பாரத் எலெக்ட்ரானிக்ஸ், எடர்னல், டாடா மோட்டார்ஸ், பாரத வங்கி, கோடக் மகிந்திரா வங்கி ஆகியவற்றின் பங்குகள் லாபத்துடன் காணப்பட்டன. இதேபோன்று, தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு 122.85 புள்ளிகள் உயர்ந்து 26,325.80 புள்ளிகளாக இருந்தது.
- 1 Dec 2025 11:54 AM IST
மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்?
டிட்வா புயல் காரணமாக தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தென்காசி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- 1 Dec 2025 11:30 AM IST
நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் தொடங்கியது; எதிர்க்கட்சிகளின் திட்டம் என்ன?
நாடாளுமன்றத்தில் குளிர் கால கூட்டத்தொடர் தொடங்கியுள்ளது. மக்களவையை சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையேற்று நடத்துகிறார். மாநிலங்களவையை துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் வழிநடத்த உள்ளார். அவர் துணை ஜனாதிபதியான பின்னர் கலந்து கொள்ளும் முதல் கூட்டத்தொடர் இதுவாகும்.
இதனை முன்னிட்டு, அவையில் எஸ்.ஐ.ஆர். பணிகள், டெல்லி காற்று மாசுபாடு, நெல் ஈரப்பதம் உள்ளிட்ட விவகாரங்களை நாடாளுமன்றத்தில் எழுப்ப எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன என தகவல் தெரிவிக்கின்றது.
கல்விக்கான நிதியை அதிகரித்து வழங்குவது, நெல்லுக்கான ஈரப்பதம் 17 சதவீதத்தில் இருந்து 25 சதவீதம் என்ற அளவில் அதிகரிக்கப்பட வேண்டும், எஸ்.ஐ.ஆர். குறித்த விவாதம் உள்ளிட்ட விவகாரங்களை தி.மு.க. எம்.பி.க்கள் எழுப்ப கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கேற்ப, எஸ்.ஐ.ஆர். குறித்து மக்களவையில் விவாதம் நடத்த வேண்டும் என தி.மு.க. நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி ஒத்திவைப்பு நோட்டீஸ் அளித்துள்ளார்.
- 1 Dec 2025 11:28 AM IST
எதிர்க்கட்சிகள் அமளி மக்களவை மதியம் 12 மணி வரை ஒத்திவைப்பு
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
- 1 Dec 2025 11:05 AM IST
நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது
நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது. இதனை முன்னிட்டு, எஸ்.ஐ.ஆர். பணிகள், டெல்லி காற்று மாசுபாடு, நெல் ஈரப்பதம் உள்ளிட்ட விவகாரங்களை நாடாளுமன்றத்தில் எழுப்ப எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.
- 1 Dec 2025 11:04 AM IST
குளிர்கால கூட்டத்தொடர் இந்தியா கூட்டணி முக்கிய ஆலோசனை
குளிர்கால கூட்டத்தொடரையொட்டி இந்தியா கூட்டணி முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டது. இதில், நாடாளுமன்ற அலுவலகத்தில் எதிர்க்கட்சி தலைவர்களுடன் காங்கிரஸ் தலைவர் கார்கே முக்கிய ஆலோசனை நடத்தினார். இதில், அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட எம்.பி.க்கள் பங்கேற்றனர்.
- 1 Dec 2025 11:01 AM IST
கனமழை பாதிப்பு: டெல்டா மாவட்ட கலெக்டர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை
தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் டிட்வா புயல் காரணமாக பெய்த கனமழையால் பயிர்கள் சேதமடைந்துள்ளன. இதனால் அரசு தங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், டெல்டா மாவட்ட கலெக்டர்கள், வேளாண் அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் இன்று காலை 11 மணிக்கு இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.













