
அரையாண்டு தேர்வு வினாத்தாளை பதிவிறக்கம் செய்வதற்கான வழிகாட்டி நெறிமுறைகள்- பள்ளிக்கல்வித்துறை
அரையாண்டு தேர்வு வருகிற 10-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை நடைபெற இருக்கிறது. தேர்வை எதிர்கொள்ள மாணவ-மாணவிகள் தயாராகி வருகின்றனர். தேர்வுக்காக வினாத்தாள் தயாரிக்கும் பணியிலும் பள்ளிக்கல்வித்துறை மும்முரமாக ஈடுபட்டு இருக்கிறது. அந்தவகையில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கான வினாத்தாளை பதிவிறக்கம் செய்வது தொடர்பான வழிகாட்டி நெறிமுறைகளை தொடக்கக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-
1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மாவட்டக்கல்வி அலுவலர்களுக்கு கல்வி மேலாண்மை தகவல் அமைப்பு (எமிஸ்) தளத்தில் இன்று (திங்கட்கிழமை) முதல் நாளை மறுதினம் (புதன்கிழமை) வரை பதிவிறக்கம் செய்து, ஒவ்வொரு பள்ளிகளுக்கும் வகுப்பு, பாடம், பயிற்றுவழி வாரியாக பிரித்து, உறையிடப்பட்ட கவரில் வைத்து தேர்வு நடைபெறுவதற்கு 2 நாட்களுக்கு முன்னதாக அனுப்பி வைக்க வேண்டும். தலைமை ஆசிரியர்கள் அதனை பாதுகாப்பாக வைத்து, தேர்வு நடைபெறும் தினத்தன்று வினாத்தாளை எடுத்து பயன்படுத்த வேண்டும்.






