இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 31.12.2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 31 Dec 2025 1:35 PM IST
நாம் இதுவரை பெற்ற வெற்றிகள் தந்த ஊக்கத்தோடும், போராட்டங்களால் பெற்ற துணிவோடும் 2026-ல் மாபெரும் வெற்றியை நோக்கி முன்செல்கிறோம்! நாம் என்றால் தமிழ்நாட்டு மக்களாகிய நீங்கள் அனைவரும் பெறப்போகும் வெற்றியைத்தான் குறிப்பிடுகிறேன். அமைதியும், நல்லிணக்கமும், மகிழ்ச்சியும், புதிய வெற்றிகளும் நிறைந்த ஏற்றமிகு ஆண்டாக 2026 அனைவருக்கும் அமைந்திட எனது புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
- 31 Dec 2025 1:25 PM IST
திருத்தணி ரெயில் நிலையத்தில் புடவை வியாபாரி மீது இளைஞர்கள் தாக்குதல் - அண்ணாமலை கண்டனம்
சூரஜ் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதலின் காயங்கள் இன்னும் ஆறாத நிலையிலேயே, நேற்று திருத்தணியில் மேலும் ஒரு வன்முறைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. ஜமால் என்ற உள்ளூர் வியாபாரி. எந்தவிதத் தூண்டுதலும் காரணமும் இன்றி ஒரு கும்பலால் தாக்கப்பட்டுள்ளார்.
சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதில் தங்களின் முழுமையான தோல்வியை திமுக எப்போது ஏற்றுக்கொள்ளப் போகிறது?இன்னும் எத்தனை சூரஜ்களும் ஜமால்களும் பாதிக்கப்பட வேண்டும்? என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
- 31 Dec 2025 1:23 PM IST
அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக அமைச்சர்கள் ஆலோசனை
ஆசிரியர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆலோசனையில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, எ.வ.வேலு, அன்பில் மகேஸ், தலைமைச் செயலாளர், நிதிச் செயலர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
- 31 Dec 2025 1:23 PM IST
திருத்தணியில் வடமாநில இளைஞர் மீது கொலைவெறித் தாக்குதல்: தமிழ்நாட்டுக்கு தலைகுனிவு - திருமாவளவன்
ஒடிசா மாநிலத்தைச் சார்ந்த புலம்பெயர் தொழிலாளர் ஒருவரைக் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கி, வெட்டிக் காயப்படுத்திய குரூரச் செயலை 'ரீல்ஸ்' என்னும் பெயரில் காட்சிப் பதிவாகச் சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர். இந்த அவலம் தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. இந்த அநாகரிகத்தை விசிக சார்பில் மிக வன்மையாகக் கண்டிக்கிறோம் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
- 31 Dec 2025 12:55 PM IST
’அந்த படம் என்னை ரொம்ப பாதித்தது.. 3 நாட்கள் தூக்கமே வரல’ - மாரி செல்வராஜ்
சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய மாரி செல்வராஜ், ஜான்வி கபூரின் 'ஹோம்பவுண்ட்' திரைப்படம் தன்னை தூங்கவிடவில்லை என்று கூறினார். அவர் பேசுகையில், 'ஹோம்பவுண்ட்' திரைப்படம் என்னை மிகவும் பாதித்தது. இரண்டு மூன்று நாட்களுக்கு எனக்குத் தூக்கமே வரவில்லை. ஒரு நாள் முழுவதும் நான் யாரிடமும் பேசவில்லை. மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தேன். அந்தப் படம் இப்படி இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை' என்றார்.
- 31 Dec 2025 12:53 PM IST
ஜி மெயில் ஐடி பிடிக்கலையா.. இனி அதையும் மாற்றலாம் - கூகுள் கொண்டு வந்த சூப்பர் அப்டேட்
பயனர்கள் தங்கள் கூகுள் கணக்கை அப்படியே வைத்துக்கொண்டு. யூசர் நேமில் பழைய ஜிமெயில் முகவரியை மாற்றிவிட்டு, புதிய முகவரியாக மாற்றிக்கொள்ளலாம். ஜிமெயில் ஐடி அட்ரஸ் மாற்றினாலும் பெரிய சிக்கல் ஏற்படாது எனவும், பழைய மற்றும் புதிய ஜிமெயில் முகவரிகளுக்கு அனுப்பப்படும் அனைத்து மின்னஞ்சல்களுமே இன்பாக்ஸிற்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 31 Dec 2025 12:52 PM IST
பான் கார்டுடன் ஆதார் எண் இணைப்பு.. இன்றே கடைசி நாள்- மறந்துடாதீங்க!
பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க டிசம்பர் 31ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இன்றுதான் கடைசி நாளாகும். பொதுமக்களின் நிதித் தரவுகளை முறைப்படுத்தும் விதமாக பான் எண்ணை ஆதாருடன் இணைப்பதை வருமான வரித்துறை கட்டாயமாக்கி உள்ளது.
இதுவரை இணைக்காதவர்கள், இன்றைக்குள் இணைத்து கொள்ளவும். அப்படி தவறினால் ஆயிரம் ரூபாய் தாமதக் கட்டணம் செலுத்தி தங்கள் பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இதுதான் கடைசி வாய்ப்பு எனவும், இணைக்க தவறினால், பான் எண் செல்லாது என்று அறிவிக்கப்படும் எனவும் வருமான வரித்துறை எச்சரித்துள்ளது.
- 31 Dec 2025 12:50 PM IST
‘பருத்திவீரன்’ பட பாடகி லட்சுமி அம்மாள் காலமானார்
இயக்குநர் அமீர் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான ‘பருத்திவீரன்’ திரைப்படத்தில் ‘ஊரோரம் புளியமரம்’, ‘டங்கா டுங்கா’ ஆகிய பாடல்களை பாடி பட்டி தொட்டியெங்கும் பருத்திவீரன் லெட்சுமி எனப் புகழ்பெற்ற பாடகி லட்சுமி அம்மாள் (75) வயது முதிர்வின் காரணமாக இன்று காலை காலமானார். இவரது மறைவு திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- 31 Dec 2025 12:47 PM IST
எங்கள் கட்சியில் என்ன பிரச்சினையோ அதனை நாங்கள் பேசி தீர்த்துக்கொள்வோம். தமிழக அரசுக்கு எதிராகவோ, பாஜகவுக்கு ஆதரவாகவோ யாராவது பேசினால் அந்த புகாரை எங்கள் தலைமையிடம் தெரிவிப்போம். நடவடிக்கை எடுப்பார்கள் என நாங்கள் முழுமையாக நம்புகிறோம்.
ஆனால் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளும் எங்கள் கூட்டணி கட்சிகளும் இதனை பெரிதுபடுத்த வேண்டாம். உள்கட்சி விவகாரத்தில் தயவு செய்து எந்தவித பிரச்சினையும் ஏற்படுத்த வேண்டாம் என்று வேண்டுகோள் வைக்கிறேன் என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
- 31 Dec 2025 12:47 PM IST
'டிமான்ட்டி காலனி 3'...நாளை வெளியாகும் முக்கிய அப்டேட்
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் உருவாகி வரும் 'டிமான்ட்டி காலனி 3' படத்தின் பர்ஸ்ட் லுக் நாளை காலை 11.11 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு புது வீடியோ ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
















