இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 31.12.2025


LIVE
இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 31.12.2025
x
தினத்தந்தி 31 Dec 2025 10:00 AM IST (Updated: 31 Dec 2025 3:07 PM IST)
t-max-icont-min-icon

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Live Updates

  • 31 Dec 2025 12:55 PM IST

    ’அந்த படம் என்னை ரொம்ப பாதித்தது.. 3 நாட்கள் தூக்கமே வரல’ - மாரி செல்வராஜ்

    சமீபத்திய  நேர்காணல் ஒன்றில் பேசிய மாரி செல்வராஜ், ஜான்வி கபூரின் 'ஹோம்பவுண்ட்' திரைப்படம் தன்னை தூங்கவிடவில்லை என்று கூறினார். அவர் பேசுகையில், 'ஹோம்பவுண்ட்' திரைப்படம் என்னை மிகவும் பாதித்தது. இரண்டு மூன்று நாட்களுக்கு எனக்குத் தூக்கமே வரவில்லை. ஒரு நாள் முழுவதும் நான் யாரிடமும் பேசவில்லை. மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தேன். அந்தப் படம் இப்படி இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை' என்றார்.

  • 31 Dec 2025 12:53 PM IST

    ஜி மெயில் ஐடி பிடிக்கலையா.. இனி அதையும் மாற்றலாம் - கூகுள் கொண்டு வந்த சூப்பர் அப்டேட்

    பயனர்கள் தங்கள் கூகுள் கணக்கை அப்படியே வைத்துக்கொண்டு. யூசர் நேமில் பழைய ஜிமெயில் முகவரியை மாற்றிவிட்டு, புதிய முகவரியாக மாற்றிக்கொள்ளலாம். ஜிமெயில் ஐடி அட்ரஸ் மாற்றினாலும் பெரிய சிக்கல் ஏற்படாது எனவும், பழைய மற்றும் புதிய ஜிமெயில் முகவரிகளுக்கு அனுப்பப்படும் அனைத்து மின்னஞ்சல்களுமே இன்பாக்ஸிற்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • 31 Dec 2025 12:52 PM IST

    பான் கார்டுடன் ஆதார் எண் இணைப்பு.. இன்றே கடைசி நாள்- மறந்துடாதீங்க!

    பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க டிசம்பர் 31ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இன்றுதான் கடைசி நாளாகும். பொதுமக்களின் நிதித் தரவுகளை முறைப்படுத்தும் விதமாக பான் எண்ணை ஆதாருடன் இணைப்பதை வருமான வரித்துறை கட்டாயமாக்கி உள்ளது.

    இதுவரை இணைக்காதவர்கள், இன்றைக்குள் இணைத்து கொள்ளவும். அப்படி தவறினால் ஆயிரம் ரூபாய் தாமதக் கட்டணம் செலுத்தி தங்கள் பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இதுதான் கடைசி வாய்ப்பு எனவும், இணைக்க தவறினால், பான் எண் செல்லாது என்று அறிவிக்கப்படும் எனவும் வருமான வரித்துறை எச்சரித்துள்ளது. 

  • 31 Dec 2025 12:50 PM IST

    ‘பருத்திவீரன்’ பட பாடகி லட்சுமி அம்மாள் காலமானார்

    இயக்குநர் அமீர் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான ‘பருத்திவீரன்’ திரைப்படத்தில் ‘ஊரோரம் புளியமரம்’, ‘டங்கா டுங்கா’ ஆகிய பாடல்களை பாடி பட்டி தொட்டியெங்கும் பருத்திவீரன் லெட்சுமி எனப் புகழ்பெற்ற பாடகி லட்சுமி அம்மாள் (75) வயது முதிர்வின் காரணமாக இன்று காலை காலமானார். இவரது மறைவு திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

  • 31 Dec 2025 12:47 PM IST

    காங்கிரஸ் உள்கட்சி பிரச்சினையை பெரிதுபடுத்த வேண்டாம் - கூட்டணி கட்சிகளுக்கு செல்வப்பெருந்தகை வேண்டுகோள்

    எங்கள் கட்சியில் என்ன பிரச்சினையோ அதனை நாங்கள் பேசி தீர்த்துக்கொள்வோம். தமிழக அரசுக்கு எதிராகவோ, பாஜகவுக்கு ஆதரவாகவோ யாராவது பேசினால் அந்த புகாரை எங்கள் தலைமையிடம் தெரிவிப்போம். நடவடிக்கை எடுப்பார்கள் என நாங்கள் முழுமையாக நம்புகிறோம்.

    ஆனால் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளும் எங்கள் கூட்டணி கட்சிகளும் இதனை பெரிதுபடுத்த வேண்டாம். உள்கட்சி விவகாரத்தில் தயவு செய்து எந்தவித பிரச்சினையும் ஏற்படுத்த வேண்டாம் என்று வேண்டுகோள் வைக்கிறேன் என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

  • 31 Dec 2025 12:47 PM IST

    'டிமான்ட்டி காலனி 3'...நாளை வெளியாகும் முக்கிய அப்டேட்

    அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் உருவாகி வரும் 'டிமான்ட்டி காலனி 3' படத்தின் பர்ஸ்ட் லுக் நாளை காலை 11.11 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு புது வீடியோ ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

  • 31 Dec 2025 12:11 PM IST

    காங்கிரஸ் உட்கட்சி விவகாரத்தில் தலையிட வேண்டாம் - கூட்டணி கட்சிகளுக்கு மாணிக்கம் தாகூர் எம்.பி. எச்சரிக்கை

    காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி விவகாரத்தில் கூட்டணி கட்சிகள் தலையிட வேண்டாம் என்று விசிக, மதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் எச்சரிக்கை விடுத்துள்ளார். திருமாவளவன், வைகோ, சண்முகம், வீரபாண்டியன் ஆகிய தலைவர்களை குறிப்பிட்டு மாணிக்கம் தாகூர் பதிவிட்டுள்ளார்.

  • 31 Dec 2025 12:10 PM IST

    2.22 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு: டோக்கன் வழங்கும் பணி விரைவில் தொடக்கம்

    பொங்கல் பரிசு தொகுப்பை நெரிசல் இல்லாமல் விநியோகிக்க உணவு மற்றும் கூட்டுறவுத் துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. வீடு, வீடாக டோக்கன் விநியோகித்து ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான டோக்கன்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அதற்கான டோக்கனும் அச்சிடப்பட்டு தயார் நிலையில் உள்ளன. அரசிடம் இருந்து அறிவிப்பு வெளியானதும் தேதி குறிப்பிட்டு வீடு வீடாக டோக்கன் வழங்கப்படும். அனேகமாக, இன்றே பொங்கல் பரிசு தொகுப்புடன் ரொக்கப் பணம் எவ்வளவு என்ற அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.

  • 31 Dec 2025 12:09 PM IST

    திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றுவதை யாராலும் தடுக்க முடியாது: தர்மேந்திர பிரதான்

    தமிழகம் வந்துள்ள மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று சாமி தரிசனம் செய்தார். அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் தர்மேந்திர பிரதான் கூறியதாவது:-

    திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணியில் விளக்கேற்றுவதை யாராலும் தடுக்க முடியாது. மலை மீது தீபமேற்றுவதை தடுக்க நினைப்பவர்களை சிவன் பார்த்துக் கொள்வார். இந்த விவகாரத்தை அரசியல் ரீதியாக தமிழக அரசு கையாள்வது கண்டிக்கத்தக்கது. திருக்குறளை சமூகத்திலிருந்து எப்படி முடியாதோ அதுபோலதான் திருப்பரங்குன்றமும். இவ்வாறு அவர் கூறினார்.

  • 31 Dec 2025 12:07 PM IST

    சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் 6-வது நாளாக போராட்டம்

    6-வது நாளாக இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகத்தை முற்றுகையிட்டு இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த தேர்லில் திமுக கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று முழக்கமிட்டு ஆசிரியர்கள் போராடி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போராட்டத்தைக் கட்டுப்படுத்த போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

1 More update

Next Story