அந்த வானத்தை போல மனம் படைத்த மன்னவனே.. இன்று விஜயகாந்தின் 2-வது நினைவு தினம்

'கேப்டன் பிரபாகரன்' படம் வெளிவந்த பிறகு 'கேப்டன்' என்றே ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டு வந்தார்.
சென்னை,
சிறந்த நடிகர், நடிகர் சங்க தலைவர், தேமுதிக தலைவர் என்று பன்முகம் கொண்டவர் விஜயகாந்த். கடந்த 2023-ம் ஆண்டு இதே நாளில் (டிசம்பர் 28) தனது 71-வது வயதில் மறைவுற்றார்.
அவரது 2-வது நினைவு நாளில், அவரது வாழ்க்கை பாதையை சற்று பின்நோக்கி பார்ப்போம்.
சினிமாவில்தான் இவரது பெயர் விஜயகாந்த். ஆனால், உண்மையான பெயர் விஜயராஜ். 1952-ம் ஆண்டு ஆகஸ்டு 25-ந் தேதி மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் அழகர்சாமி - ஆண்டாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். சிறுவயது முதலே சினிமாவின் மீது ஆர்வம் அதிகமாக இருந்ததால், படிப்பின் மீது அவருக்கு நாட்டம் இல்லை. விளைவு... படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு சினிமாவில் நடிப்பதற்காக சென்னை வந்தார்.
தமிழ் சினிமாவில் நிலையான இடம்
அந்த காலக்கட்டத்தில், தோல் வெள்ளையாக இருப்பவர்களுக்கே சினிமா துறை சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்பு அளிக்கும். இவர் கருப்பு நிறத்தில் இருந்ததால், யாரும் இவருக்கு வாய்ப்பளிக்க முன்வரவில்லை. இருந்தாலும் மனம் தளராமல் போராடினார். கடும் போராட்டத்திற்கு பிறகு 1979-ம் ஆண்டு 'இனிக்கும் இளமை' என்ற படத்தில் வில்லனாக நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. 1980-ம் ஆண்டு 'தூரத்து இடிமுழக்கம்' என்ற படத்தின் மூலம் கதாநாயகன் ஆனார்.
1981-ம் ஆண்டு விஜயகாந்த் நடிப்பில் வெளியான 'சட்டம் ஒரு இருட்டறை' அவருக்கு வெற்றிப் படமாக அமைந்தது. அடுத்தடுத்து வெற்றிப் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு நிலையான இடத்தை பிடித்தார்.
18 படங்களில் நடித்து சாதனை
1984-ம் ஆண்டில் மட்டும் 18 படங்களில் நடித்து விஜயகாந்த் சாதனை படைத்தார். 36 ஆண்டுகள் சினிமாவில் நடித்த அவர், 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். விஜயகாந்தின் 100-வது படமான 'கேப்டன் பிரபாகரன்' வெள்ளி விழா கண்டு சாதனை படைத்தது. ரஜினிகாந்த், கமல்ஹாசன் படங்கள் கூட அப்போது அந்த அளவுக்கு வசூலை வாரிக் குவிக்கவில்லை.
'கேப்டன் பிரபாகரன்' படம் வெளிவந்த பிறகு 'கேப்டன்' என்றே ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டு வந்தார்.
நடிகர் சங்க தலைவர்
நடிப்புக்கு இடையே 1999-ம் ஆண்டு நடிகர் சங்க தலைவர் பொறுப்பை விஜயகாந்த் ஏற்றார். அந்த நேரத்தில், கடும் நிதி நெருக்கடியில் நடிகர் சங்கம் சிக்கித் தவித்தது.
உடனே, சிங்கப்பூர், மலேசியாவில் நட்சத்திர கலை விழாவை ஏற்பாடு செய்த விஜயகாந்த், அதன் மூலம் கிடைத்த வருமானத்தை கொண்டு நடிகர் சங்கத்தின் கடனை வட்டியும், முதலுமாக அடைத்தார். நலிவடைந்த சினிமா கலைஞர்களுக்கும் ஓய்வூதிய திட்டத்தை அறிமுகம் செய்து, அதற்காக பெரும் தொகையை வங்கியில் டெபாசிட் செய்தார்.
அரசியலில் கால் பதித்த விஜயகாந்த்
நடிகர் சங்கத்தை மீட்டெடுக்க அவர் மேற்கொண்ட முயற்சி, சினிமா துறையில் மட்டுமல்லாது பொதுமக்கள் மத்தியிலும் பாராட்டை பெற்றது. அதனைத் தொடர்ந்து, 2005-ம் செப்டம்பர் 14-ந் தேதி அரசியலிலும் விஜயகாந்த் கால் பதித்தார்.
தேமுதிக என்ற கட்சியை தொடங்கி 2006-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து களம் கண்டார். ஆனால், விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்ட விஜயகாந்த் மட்டும் வெற்றி பெற்றாலும், கணிசமான வாக்குகளும் தேமுதிகவுக்கு கிடைத்தது.
எதிர்க்கட்சி அந்தஸ்து
2011-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற தேமுதிக 41 தொகுதிகளில் போட்டியிட்டு, அதில் 29 இடங்களில் வெற்றிபெற்று, தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சி என்ற அந்தஸ்துக்கு உயர்ந்தது.
ஆனால், 'எதிர்' கட்சியாக இருந்தபோதே கூட்டணிக்கு தலைமை வகித்த அதிமுகவுடன் மோதல் போக்கை கடைபிடித்ததால் 'எதிரி' கட்சி என்ற நிலைக்கு தள்ளப்பட்டது.
அரசியலில் பின்னடைவு
2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியில் களம் கண்ட தேமுதிக 104 இடங்களில் போட்டியிட்டு ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை. அதன்பிறகு, தேமுதிக அரசியலில் பின்னடைவை சந்தித்தது.
கட்சியின் தலைவர் விஜயகாந்தும் உடல்நலம் பாதிக்கப்பட்டு அவ்வப்போது சிகிச்சை பெற்று வந்தார். உடல் நலம் பாதிப்பு மேலும் அதிகமான நிலையில், 2023-ம் ஆண்டு டிசம்பர் 28-ந் தேதி மரணம் அடைந்தார்.
பத்ம பூஷன் விருது
திரைத்துறையில் விஜயகாந்த் ஜொலித்தபோது பல விருதுகளை பெற்றுள்ளார். 1994-ம் ஆண்டு தமிழக அரசின் எம்.ஜி.ஆர். விருது, 2001-ம் ஆண்டு தமிழக அரசின் கலைமாமணி விருது, அதே ஆண்டு சிறந்த இந்திய குடிமகனுக்கான விருது, 2009-ல் தமிழ் சினிமாவில் சிறந்த 10 நடிகருக்கான பிலிம் பேர் விருது, 2011-ம் ஆண்டு சர்வதேச சர்ச் மேலாண்மை நிறுவனத்தின் கவுரவ டாக்டர் பட்டம் ஆகியவற்றை பெற்றார்.
'தாயகம்' படத்திற்காக சிறந்த நடிகருக்கான தமிழக அரசின் விருது, சிறந்த நடிகருக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகள் (4 முறை), பிலிம் பேர் விருது என பல விருதுகளை அவர் பெற்றுள்ளார்.
அவரது மறைவுக்கு பிறகு கடந்த ஆண்டு (2024) மத்திய அரசு பத்ம பூஷன் விருதை வழங்கி கவுரவித்தது. கலைத்துறையில் விஜயகாந்த் ஆற்றிய பங்களிப்புக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.






