இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 19-11-2025


தினத்தந்தி 19 Nov 2025 9:19 AM IST (Updated: 19 Nov 2025 8:08 PM IST)
t-max-icont-min-icon

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Live Updates

  • 19 Nov 2025 11:16 AM IST

    முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு டெல்லியில் உள்ள அவருடைய சக்தி ஸ்தல் நினைவகத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட தலைவர்கள் இன்று மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

  • 19 Nov 2025 11:13 AM IST

    தூத்துக்குடி கடற்கரை சாலையில் கார் மரத்தில் மோதியதில் மருத்துவ மாணவர்கள் 3 பேர் பலி

    தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரியில் பயிலும் மாணவர்கள் 5 பேர் நேற்று இரவு காரில் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் சென்ற கார் , கடற்கரை சாலையில் திடீரென கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர்களான முகிலன் (வயது 23), ராகுல் ஜெபஸ்டின், சாரூபன் ஆகிய மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.  மேலும் இரண்டு மாணவர்கள் படுகாயமடைந்தனர்.

  • 19 Nov 2025 11:06 AM IST

    மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்

    தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோவை மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

  • 19 Nov 2025 10:44 AM IST

    விஜய் நிலைப்பாட்டில் திடீர் மனமாற்றம் - அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை?

    தி.மு.க. என்ற கட்சியை எதிர்க்க அ.தி.மு.க.வே, பா.ஜனதாவுடன் சேர்ந்துள்ளது. கரூர் நெரிசல் வழக்கு தற்போது சி.பி.ஐ. வசம் உள்ளது. எனவே இந்த தேர்தலில் மிக பாதுகாப்பாக அ.தி.மு.க. - பா.ஜனதா கூட்டணியில் இணைந்து விட்டால் த.வெ.க. போட்டியிடும் தொகுதிகளில் 99 சதவீதம் வெற்றி உறுதி. இது தவிர த.வெ.க.விற்கு அரசியல் பாதுகாப்பு கிடைக்கும்.

    தி.மு.க.வையும் வீழ்த்தி விட முடியும். இது போன்ற கணக்குகளை எல்லாம் போட்டு, அ.தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை விஜய் தொடங்கி உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது. முதல் கட்ட பேச்சுவார்த்தை சற்று சுமுகமாக முடிந்து இருப்பதால் அ.தி.மு.கவின் முக்கிய பிரமுகர் அடுத்தக்கட்டத்தில் நேரடியாக பேச்சுவார்த்தையில் இறங்குவார் என்றும் கூறுகின்றனர்.

  • 19 Nov 2025 10:23 AM IST

    தமிழகத்தில் 22 லட்சம் விவசாயிகளுக்கு உதவித்தொகை: மாவட்ட வாரியாக பட்டியல்

    கோவையில் இன்று தொடங்கும் தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாட்டில் ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 9 கோடி விவசாயிகளுக்கு ரூ.18 ஆயிரம் கோடி நிதியை பிரதமர் மோடி வழங்குகிறார். இதில் தமிழகத்தில் 21 லட்சத்து 80 ஆயிரத்து 204 விவசாயிகள் பயன் பெறுகிறார்கள். தமிழகத்தில் மாவட்ட வாரியாக பயன்பெறும் விவசாயிகளின் எண்ணிக்கை வருமாறு:-

  • 19 Nov 2025 10:18 AM IST

    ராமேசுவரம்-சென்னை வந்தே பாரத் ரெயில் கால அட்டவணை வெளியீடு

    ராமேசுவரத்தில் இருந்து மதுரை வழியாக விரைவில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், ராமேசுவரம்-சென்னை வந்தே பாரத் ரெயில் காரைக்குடி வழியாக இயக்கப்படுவதாக தற்காலிக நேர அட்டவணை வெளியாகி உள்ளது.

  • 19 Nov 2025 9:58 AM IST

    மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?

    தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது . இதன்படி ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 குறைந்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 500-க்கும், சவரனுக்கு ரூ.800 குஉயர்ந்து , ஒரு சவரன் ரூ.92 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.

  • 19 Nov 2025 9:33 AM IST

    ரஷிய அதிபருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு; மண்டல, உலகளாவிய விசயங்கள் பற்றி ஆலோசனை

    ரஷியாவின் மாஸ்கோ நகரில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் (எஸ்.சி.ஓ.) கலந்து கொள்வதற்காக மத்திய வெளிவிவகாரங்களுக்கான மந்திரி ஜெய்சங்கர் சென்றார். இந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு 17 மற்றும் 18 ஆகிய நாட்களில் நடந்தது.

    இந்த பயணத்தின் ஒரு பகுதியாக அந்நாட்டு அதிபர் புதினை, மத்திய மந்திரி ஜெய்சங்கர் நேற்று நேரில் சந்தித்து பேசினார். அப்போது, இரு தலைவர்களும் மண்டல மற்றும் உலகளாவிய வளர்ச்சிக்கான பார்வைகளை பகிர்ந்து கொண்டனர்.

  • 19 Nov 2025 9:32 AM IST

    கனமழை எதிரொலி; குற்றாலம் மெயின் அருவியில் 2-வது நாளாக குளிக்க தடை

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள குற்றால அருவிகளான மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலி அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் குளிப்பதற்காக சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகிறது. கார்த்திகை மாதம் பிறந்துள்ள நிலையில் சபரிமலை கோவிலுக்கு மாலை அணிந்து செல்லும் பக்தர்கள், குற்றாலம் வந்து அருவிகளில் நீராடி விட்டு செல்கின்றனர்.

    இதனால் குற்றாலம் அருவிகளில் கூட்டம் நிரம்பி காணப்பட்டு வருகிறது. தற்போது நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் குற்றாலம் அருவிகளுக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

  • 19 Nov 2025 9:30 AM IST

    கோவை, மதுரை மெட்ரோ நிராகரிப்பு: பாஜக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    கோயில் நகர்' மதுரைக்கும், 'தென்னிந்திய மான்செஸ்டர்' கோவைக்கும் "NO METRO" என நிராகரித்துள்ளது ஒன்றிய பா.ஜ.க. அரசு!

    அனைவருக்கும் பொதுவானதாகச் செயல்படுவதுதான் அரசுக்கான இலக்கணம். அதற்கு மாறாக, பா.ஜ.க.வைத் தமிழ்நாட்டு மக்கள் நிராகரிப்பதற்காக இப்படி பழிவாங்குவது கீழ்மையான போக்கு. பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் உள்ள சிறிய இரண்டாம் நிலை மாநகரங்களுக்குக் கூட மெட்ரோ ரெயிலுக்கான ஒப்புதல் வழங்கிவிட்டு, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களைப் புறக்கணிப்பது அழகல்ல. கூட்டாட்சிக் கருத்தியலை இப்படி சிதைப்பதைச் சுயமரியாதைமிக்க மண்ணான தமிழ்நாடு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது.

    சென்னை மெட்ரோ பணிகளைத் தாமதப்படுத்தி முடக்க நடந்த முயற்சிகளை முறியடித்து முன்னேறினோம்! அதேபோல மதுரை & கோவையிலும் வருங்கால வளர்ச்சிக்கு இன்றியமையாத தேவையான மெட்ரோ ரெயிலைக் கொண்டு வருவோம். என தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story