இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 19-11-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 19 Nov 2025 9:27 AM IST
சென்னையில் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை
சென்னையில் சைதாப்பேட்டை, கோட்டூர்புரம், கே.கே.நகர், எம்ஜிஆர் நகர், சவுகார்பேட்டை, கீழ்ப்பாக்கம், கோடம்பாக்கம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 21 வாகனங்களில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள சைதன்யா அடுக்குமாடி குடியிருப்பில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த இரும்பு வியாபாரி நிர்மல் குமார் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
- 19 Nov 2025 9:24 AM IST
டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வு: ஒரு இடத்துக்கு 329 பேர் போட்டி
குரூப்-2, 2ஏ பணிகளுக்கான 645 காலிப்பணியிடங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது 625 பணியிடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 1,270 ஆக உயர்ந்துள்ளது. குரூப்-2 காலிப்பணியிடங்கள் நிதியாண்டுக்கு சராசரியாக 1,254 காலிப்பணியிடங்கள் வீதம் அறிவிக்கப்பட்டு வருகின்றன. 2025-ம் ஆண்டு குரூப்-2 பணியிடங்கள் 1,270 ஆக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு கூடுதல் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அரசு துறை, நிறுவனங்களிடம் இருந்து மேலும் பணியிடங்கள் பெறப்படும் பட்சத்தில் கலந்தாய்வுக்கு முன்னதாக அந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஜூலை மாதம் வெளியிடப்பட்ட காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையின்படி, அதற்கான தேர்வு எழுத போட்டியிட்டவர்களை ஒப்பிடும்போது, ஒரு இடத்துக்கு 650 பேர் போட்டி போட்டனர். தற்போது கூடுதல் பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டிருப்பதால், இதன் மூலம் ஒரு இடத்துக்கு 329 பேர் போட்டியிடுகிறார்கள்.
- 19 Nov 2025 9:21 AM IST
காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோவை மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தமிழகத்தின் 5 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.











