
டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வு: ஒரு இடத்துக்கு 329 பேர் போட்டி
குரூப்-2, 2ஏ பணிகளுக்கான 645 காலிப்பணியிடங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது 625 பணியிடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 1,270 ஆக உயர்ந்துள்ளது. குரூப்-2 காலிப்பணியிடங்கள் நிதியாண்டுக்கு சராசரியாக 1,254 காலிப்பணியிடங்கள் வீதம் அறிவிக்கப்பட்டு வருகின்றன. 2025-ம் ஆண்டு குரூப்-2 பணியிடங்கள் 1,270 ஆக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு கூடுதல் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அரசு துறை, நிறுவனங்களிடம் இருந்து மேலும் பணியிடங்கள் பெறப்படும் பட்சத்தில் கலந்தாய்வுக்கு முன்னதாக அந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஜூலை மாதம் வெளியிடப்பட்ட காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையின்படி, அதற்கான தேர்வு எழுத போட்டியிட்டவர்களை ஒப்பிடும்போது, ஒரு இடத்துக்கு 650 பேர் போட்டி போட்டனர். தற்போது கூடுதல் பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டிருப்பதால், இதன் மூலம் ஒரு இடத்துக்கு 329 பேர் போட்டியிடுகிறார்கள்.






