டெங்குவில் இருந்து மீள வைக்கும் உணவுப்பழக்கங்கள்


டெங்குவில் இருந்து மீள வைக்கும் உணவுப்பழக்கங்கள்
x
தினத்தந்தி 19 Oct 2023 8:45 PM IST (Updated: 19 Oct 2023 8:45 PM IST)
t-max-icont-min-icon

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், டெங்கு பாதிப்பில் இருந்து மீண்டு வரவும் பின்பற்ற வேண்டிய உணவுப்பழக்கங்கள் குறித்து பார்ப்போம்.

தமிழகத்தின் சில பகுதிகளில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. நாட்டின் பல பகுதிகளிலும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தியா மட்டுமின்றி பல நாடுகளிலும் டெங்கு காய்ச்சலுக்கு ஆளாகுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. ஊட்டச்சத்து பற்றாக்குறை, பிளேட்லெட்டுகள் இழப்பு, உடலில் ஏற்படும் அழற்சி காரணமாக டெங்கு பாதிப்புக்குள்ளானவர்கள் அதில் இருந்து முழுமையாக மீண்டு வர காலதாமதமாகும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், டெங்கு பாதிப்பில் இருந்து மீண்டு வரவும் பின்பற்ற வேண்டிய உணவுப்பழக்கங்கள் குறித்து பார்ப்போம்.

பூசணி

இதில் வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டின் போன்ற ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன. இவை உடலில் ஏற்படும் அழற்சி மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்து போராடும் ஆற்றல் படைத்தவை.

கிவி

டெங்கு காய்ச்சலில் இருந்து குணமடைய உட்கொள்ள வேண்டிய சத்தான பழங்களுள் ஒன்று கிவி. இந்த பழத்தில் வைட்டமின் சி, பொட்டாசியம், பாலிபினால்கள், டிரோலாக்ஸ் போன்ற ஆன்டிஆக்சிடென்டுகள் நிறைந்துள்ளன. அவை உடலின் நோய் எதிர்ப்பு தன்மையை மேம்படுத்தவும், டெங்கு காய்ச்சலை திறம்பட எதிர்த்துப் போராடவும் உதவும்.

உடலில் எலக்ட்ரோலைட்டுகளை சமநிலைப்படுத்தவும் துணை புரியும். டெங்கு பாதிப்புக்கு ஆளாகுபவர்கள் தினமும் 2 கிவி பழங்கள் சாப்பிட்டு வருவது பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவி செய்யும்.

மாதுளை

மாதுளை பழத்தில் இரும்புச் சத்து அதிகம் உண்டு. ரத்தத்தில் பிளேட்லெட் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும் உதவும். மேலும் டெங்கு காய்ச்சலின்போது ஏற்படும் சோர்வை குறைக்கும். உடல் ஆற்றலையும் மேம்படுத்தும்.

சிட்ரஸ் பழங்கள்

ஆரஞ்சு, நெல்லிக்காய், எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. அவை நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துவதற்கு உதவி செய்யும். பிளேட்லெட்டுகளுடன் ரத்த ஓட்டத்தை துரிதப்படுத்தும். ரத்தப்போக்கு அபாயத்தை குறைக்கவும் செய்யும்.

பப்பாளி

பப்பாளியில் பப்பைன், கரிகைன், சைமோபாபைன், அசிட்டோஜெனின் போன்ற சேர்மங்கள் உள்ளன. அவை அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளன. உடலின் நோய் எதிர்ப்பு தன்மையை வலுப்படுத்தி டெங்கு தொடர்பான வீக்கத்தை குறைக்கும் தன்மை கொண்டவை. டெங்குவில் இருந்து விரைவாக மீளவும் உதவும்.

பீட்ரூட்

இதில் இரும்பு மற்றும் போலிக் அமிலம் அதிகம் உள்ளன. அவை ரத்த சிவப்பணுக்களின் உற்பத்திக்கு அவசியமானவை. மேலும் பீட்ரூட்டில் நச்சு நீக்கும் பண்புகள் உள்ளன. அவை கல்லீரலை சுத்தப்படுத்தவும், அதன் செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவும்.

டெங்கு தொடர்பான அழற்சியின் காரணமாக உடலில் உள்ள பிளேட்லெட்டுகள் சேதம் அடைவதை தடுக்கும். இருப்பினும் பிளேட்லெட் அளவுகளில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தாது.

கீரை

கீரையில் வைட்டமின் கே மிகுதியாக இருக்கும். இது பிளேட்லெட் எண்ணிக்கையை நேரடியாக உயர்த்தாது. ஆனால் ரத்த அணுக்கள் நன்றாக உறைவதற்கு உதவும். அதனால் டெங்கு நோயாளிகள் கீரையை தவறாமல் சாப்பிட வேண்டும்.

இதில் இரும்பு, போலேட் மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. டெங்கு போன்ற வைரஸால் ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தில் இருந்து உடலை பாதுகாக்க உதவும். சோர்வு மற்றும் பலவீனம் போன்ற அறிகுறிகளில் இருந்து விரைவாக மீளவும் உதவி புரியும்.


Next Story