9 அறைகளில் 5 ஆயிரம் பொம்மைகள்; வியப்பூட்டும் நவராத்திரி கொலு அரங்கம்


9 அறைகளில் 5 ஆயிரம் பொம்மைகள்; வியப்பூட்டும் நவராத்திரி கொலு அரங்கம்
x

நவராத்திரி வழிபாடு நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மகிஷாசூரனை வதம் செய்ய அம்மன் 9 நாள் கொலுவிருந்து 10-ம் நாள் அவனை சம்ஹாரம் செய்கிறார். இதையொட்டி அம்மன் கோவில்களில் தினம் ஒரு திருக்காட்சி என்ற அடிப்படையில் 9 திருக்கோலத்தில் அம்மன் காட்சி அளித்து வருகிறார்.

நவராத்திரியில் கோவில்கள் மற்றும் வீடுகளில் கொலு வைத்து வழிபாடு நடத்துவது சிறப்பு வாய்ந்ததாகும். அத்தகைய நவராத்திரி விழாவை முன்னிட்டு நெல்லை பாளையங்கோட்டை தியாகராஜநகரில் 5 ஆயிரம் பொம்மைகளுடன் கொலு வைத்து வழிபாடு நடத்தி பலருடைய கவனத்தை ஈர்த்திருப்பவர் மரகதம்மாள். இவரது வீட்டிற்கு வருபவர்களை கவரும் வகையில் வீட்டின் தரைத்தளம் மற்றும் முதல் மாடியில் உள்ள 9 அறைகளில் கொலு பொம்மைகள் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளது.

இந்தாண்டு உலகையே இந்தியாவை நோக்கி திரும்பி பார்க்க வைத்த சந்திரயான் விண்கலம், ராக்கெட் மாதிரிகள், வந்தே பாரத் ரெயில் மற்றும் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தின் முகப்பு தோற்றம், தற்போது தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் கலைஞர் நூற்றாண்டு விழா என சம கால நிகழ்வை தத்ரூபமாக அசத்தும் வகையில் கொலு அரங்குகளை அமைத்து இருக்கிறார். இவரது வீட்டிற்குள் திரும்பிய பக்கம் எல்லாம் கொலு பொம்மைகளாக காட்சி அளிக்கிறது.

ஆதி முதல் அந்தம் வரை, விநாயகரில் தொடங்கி ஆஞ்சநேயர் வரை அனைத்து கடவுள்களின் அம்ச திருமேணி பொம்மைகளையும் காட்சிப்படுத்தி உள்ளார். மேலும் ஏசு கிறிஸ்து உருவ பொம்மைகள், குர்ஆன், மசூதி மாதிரி பொம்மைகள் போன்றவைகளையும் இடம்பெற செய்துள்ளார்.

மரகதம்மாளுடன் சேர்ந்து அவருடைய குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கொலு அலங்காரங்களை செய்திருகிறார்கள். மொத்தம் 9 அறைகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொம்மைகளை கொண்டு கொலு அரங்குகளை உருவாக்கி இருக்கிறார்கள். இது குறித்து மரகதம்மாள் பகிர்ந்து கொண்டவை...

''நவராத்திரி என்றாலே கொலு வழிபாட்டுக்கு முக்கியத்துவம் அளிப்போம். இந்த ஆண்டு 48-வது வருடமாக கொலு வைத்திருக்கிறோம். 9 நாட்களாக கொண்டாடப்படும் நவராத்திரி திருவிழாவில் எங்கள் வீட்டில் 9 அறைகளில் கொலு வைத்துள்ளோம். சாமி சிலைகளோடு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், மனித வாழ்வியல் முறையை கொலுவாக இடம் பெற செய்துள்ளோம்.




ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் நடைபெறும் சிறப்புகளை கொலுவாக காட்சிப்படுத்துவோம். இந்த ஆண்டு சந்திரயான், கலைஞர் நூற்றாண்டு விழா, வந்தே பாரத் ரெயில் என கொலு அரங்கை அமைத்துள்ளோம்.



கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான சுவாமி பொம்மைகள், கரகாட்டம் உள்ளிட்ட கிராமிய கலைகளை விளக்கும் வகையில் பொம்மைகள், தமிழ் தலைவர்கள், தேச தலைவர்கள், காடுகளை பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், ராணுவ வீரரின் தியாகத்தை விளக்கும் வகையிலும் பொம்மைகளை அமைத்திருக்கிறோம்.

கடந்த 2022-ம் ஆண்டு சிறுதானிய ஆண்டு என்பதால் சிறுதானியங்களை கொண்டு தத்ரூபமான வீடு செய்து அதையும் காட்சிப்படுத்தி இருக்கிறோம்.

இதுதவிர வருகிற 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் சென்னையில் நடைபெற இருக்கும் உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டின் 'எம்பளத்தை' ஓர் அரங்கில் இடம் பெற செய்துள்ளோம்.

பெண் பார்க்கும் படலம், மாப்பிள்ளை அழைப்பு, திருமணம் முடித்தல், வளைகாப்பு, குழந்தை பிறப்பு, பெயர் சூட்டுதல், காது குத்துதல், மஞ்சள் நீராட்டு என பெண் குழந்தைகளின் வாழ்வியலை கண் முன்பு கொண்டு வந்து நிறுத்தும் வகையிலும் கொலு அமைத்திருக்கிறோம்.

மேலும் பைரவர், வியாசர் பூஜை, ஆண்டாள் பிறப்பு, சூர்ய ரதம், ராமர் வனவாசம், அத்துடன் ஒவ்வொரு ஆண்டும் அப்போதைய டிரெண்டுக்கு ஏற்ப புது, புது கொலு பொம்மைகளை வைப்பது வழக்கம். இதற்காக தமிழகம் மட்டுமல்லாமல், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பொம்மைகளை வரவழைத்து கொலுவில் இடம் பெற செய்துள்ளோம். இதனை தினமும் மாலைநேரத்தில் பெண்கள், சிறுமிகள், மாணவ-மாணவிகள் ஆர்வமாக பார்த்து செல்கிறார்கள்'' என்கிறார்.

இந்த கொலு அரங்கத்தை வடிவமைத்து, கொலு பொம்மைகள் அமைப்பதற்கு மரகதம்மாள் மற்றும் அவருடைய குடும்பத்தினர் ஒரு மாத காலம் செலவிட்டுள்ளனர். நவராத்திரி முடிந்து அவற்றை வரிசைப்படி எடுத்து பாதுகாப்பாக வைப்பதற்கும் இதே காலம் ஆகும் என்றும் கூறுகிறார்கள். மேலும் தமிழ்நாட்டில் சிறந்த முறையில் கொலு அமைத்து வருவதற்காக ஆண்டு தோறும் முதல் பரிசையும் பெற்று வருகிறோம் என்றும் பெருமிதம் கொள்கிறார்கள்.


Next Story