மகளிர் ஆசிய கோப்பை ஆக்கி: கோல் மழை பொழிந்த இந்தியா.. தாய்லாந்தை வீழ்த்தி அசத்தல்

image courtesy: twitter/@TheHockeyIndia
மும்தாஜ் கான் ஆட்ட நாயகியாக தேர்வு செய்யப்பட்டார்.
ஹாங்சோவ்,
11-வது மகளிர் ஆசிய கோப்பை ஆக்கி போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் இன்று தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் முன்னாள் சாம்பியன்களான சீனா, தென் கொரியா மற்றும் சீன தைபே, மலேசியா அணிகளும், ‘பி’ பிரிவில் நடப்பு சாம்பியன் ஜப்பான், முன்னாள் சாம்பியன் இந்தியா, தாய்லாந்து, சிங்கப்பூர் அணிகளும் இடம் பெற்றுள்ளன.
ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் ‘டாப்-2’ இடங்களை பிடிக்கும் அணிகள் ‘சூப்பர்4’ சுற்றுக்குள் நுழையும். சூப்பர்4 சுற்றில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். இந்த போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணி அடுத்த ஆண்டு பெல்ஜியம், நெதர்லாந்து நாடுகளில் நடைபெறும் உலகக்கோப்பை போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும்.
இதில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் தாய்லாந்துடன் இன்று மோதியது. இதில் தொடக்கம் முதலே கோல் மழை பொழிந்த இந்திய அணி 11-0 என்ற கணக்கில் தாய்லாந்தை ஊதித்தள்ளியது.
இந்தியா தரப்பில் மும்தாஜ் கான், உதிதா, பியூட்டி டங்டங் தலா 2 கோல்களும், சங்கிதா குமாரி, நவ்னீத் கவுர், லாரேம்சியாமி, ஷர்மிளா தேவி மற்றும் ருதுஜா தலா ஒரு கோலும் அடித்தனர். மும்தாஜ் கான் ஆட்ட நாயகியாக் தேர்வு செய்யப்பட்டார்.