பெண்கள் ஆசிய கோப்பை ஆக்கி இன்று தொடக்கம்.. தொடக்க ஆட்டத்தில் இந்தியா-தாய்லாந்து மோதல்


பெண்கள் ஆசிய கோப்பை ஆக்கி இன்று தொடக்கம்.. தொடக்க ஆட்டத்தில் இந்தியா-தாய்லாந்து மோதல்
x

சலிமா டெடி தலைமையிலான இந்திய அணி, தாய்லாந்தை இன்று எதிர்கொள்கிறது.

ஹாங்சோவ்,

11-வது பெண்கள் ஆசிய கோப்பை ஆக்கி போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் இன்று தொடங்குகிறது. 14-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் 8 அணிகள் களம் காணுகின்றன. அவை இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் முன்னாள் சாம்பியன்களான சீனா, தென்கொரியா மற்றும் சீன தைபே, மலேசியா அணிகளும், ‘பி’ பிரிவில் நடப்பு சாம்பியன் ஜப்பான், முன்னாள் சாம்பியன் இந்தியா, தாய்லாந்து, சிங்கப்பூர் அணிகளும் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் ‘டாப்-2’ இடங்களை பிடிக்கும் அணிகள் ‘சூப்பர்4’ சுற்றுக்குள் நுழையும். சூப்பர்4 சுற்றில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். இந்த போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணி அடுத்த ஆண்டு பெல்ஜியம், நெதர்லாந்து நாடுகளில் நடைபெறும் உலகக் கோப்பை போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும்.

தொடக்க நாளான இன்று நடைபெறும் லீக் ஆட்டம் ஒன்றில் சலிமா டெடி தலைமையிலான இந்திய அணி, தாய்லாந்தை (பகல் 12 மணி) எதிர்கொள்கிறது. உலக தரவரிசையில் 9-வது இடத்தில் இருக்கும் இந்திய அணி, 30-வது இடத்தில் உள்ள தாய்லாந்தை எளிதில் தோற்கடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று நடக்கும் மற்ற ஆட்டங்களில் ஜப்பான்-சிங்கப்பூர் (காலை 9.45 மணி), தென்கொரியா-சீன தைபே (பிற்பகல் 2.15 மணி), சீனா-மலேசியா (மாலை 4.30 மணி) அணிகள் மோதுகின்றன.

1 More update

Next Story