ஆக்கி இந்தியா நூற்றாண்டு கொண்டாட்டம்: உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு

ஏராளமான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
புதுடெல்லி,
இந்தியாவில் ஆக்கி விளையாட்டுக்கான தேசிய கூட்டமைப்பு 1925-ம் ஆண்டு நவம்பர் 7-ந்தேதி ஆக்கி இந்தியா பெயரில் உருவாக்கப்பட்டது. இந்திய விளையாட்டுத்துறையில் ஈடுஇணையற்ற பல சாதனைகளை படைத்திருக்கும் ஆக்கி இந்தியா ஒலிம்பிக்கில் மட்டும் 8 தங்கம் உள்பட 13 பதக்கங்களை குவித்திருக்கிறது.
இந்த நிலையில் ஆக்கி இந்தியாவின் நூற்றாண்டு விழா நாடு முழுவதும் நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. 500 மாவட்டங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண்காட்சி ஆக்கி போட்டிகள் ஒரு நேர நடத்தப்பட்டது. இதில் ஏராளமான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
டெல்லியில் உள்ள மேஜர் தயான்சந்த் விளையாட்டு மைதானத்தில் நடந்த விழாவில் மத்திய விளையாட்டுத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா, நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி கிரண் ரிஜிஜூ, தமிழக துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஒடிசா மாநில விளையாட்டுத்துறை மந்திரி சூரிய பன்ஷிராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதில் ஆக்கி ஜாம்பவான்கள் குர்பாக்ஸ் சிங், அஸ்லாம், ஹர்பிந்தர் சிங், அஜித் பால் சிங், அசோக்குமார், கோவிந்தா, ஜாபர் இக்பால் உள்ளிட்டோர் கவுரவிக்கப்பட்டனர்.
ஆக்கி இந்தியாவும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும் இணைந்து சென்னை மற்றும் மதுரையில் 14-வது ஜூனியர் உலகக் கோப்பை ஆக்கி போட்டியை நடத்துகிறது. இந்தியா, ஜெர்மனி, நெதர்லாந்து உள்பட 24 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டி வருகிற 28-ந்தேதி முதல் அடுத்த மாதம் 10-ந்தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான வெற்றிக்கோப்பை நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இதன்படி ஆக்கி இந்தியா நூற்றாண்டு கொண்டாட்டத்திலும் கோப்பை காட்சிப்படுத்தப்பட்டது .






