இந்தியாவில் நடைபெறும் ஆக்கி தொடர்களில் பங்கேற்க பாகிஸ்தான் அணிக்கு அனுமதி

கோப்புப்படம்
பீகார், சென்னையில் நடைபெறும் ஆசிய, ஜூனியர் உலகக் கோப்பை ஆக்கி தொடர்களில் பங்கேற்க பாகிஸ்தான் அணிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
12-வது ஆசிய கோப்பை ஆக்கி போட்டி பீகாரில் உள்ள ராஜ்கிரில் அடுத்த மாதம் 27-ந் தேதி முதல் செப்டம்பர் 7-ந் தேதி வரை நடக்கிறது. இதே போல் ஜூனியர் உலகக் கோப்பை ஆக்கி போட்டி சென்னை மற்றும் மதுரையில் நவம்பர் 28-ந் தேதி முதல் டிசம்பர் 10-ந் தேதி வரை நடைபெறுகிறது.
ஆசிய கோப்பை போட்டியில் நடப்பு சாம்பியன் தென் கொரியா, இந்தியா, பாகிஸ்தான் உள்பட 8 அணிகளும், ஜூனியர் உலகக் கோப்பையில் நடப்பு சாம்பியன் ஜெர்மனி, இந்தியா, பாகிஸ்தான் உள்பட 24 அணிகளும் கலந்து கொள்கின்றன.
இந்த போட்டிகளில் பங்கேற்க பரம எதிரியான பாகிஸ்தான் அணிக்கு அனுமதி அளிக்கப்படுமா? என்று கேள்விக்குறி எழுந்தது. இந்த நிலையில் இந்த போட்டிகளில் பங்கேற்க பாகிஸ்தான் அணிக்கு அனுமதி அளிக்கப்படும் என்று மத்திய விளையாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து விளையாட்டு அமைச்சக தரப்பினர் கூறுகையில், இந்தியாவில் நடைபெறும் சர்வதேச போட்டியில் எந்தவொரு அணி பங்கேற்பதற்கும் நாங்கள் எதிரானவர்கள் கிடையாது. பாகிஸ்தான் அணி கலந்து கொள்வதை தடுக்க முயற்சித்தால் அது ஒலிம்பிக் சாசனத்தை மீறுவதாக கருதப்படும். ஆனால் இரு நாடுகள் இடையிலான போட்டி தொடர் என்பது வேறுபட்டது. அதற்கு எந்தவித தளர்வும் அளிக்கப்படாது என்றனர்.