29 அணிகள் பங்கேற்கும் தேசிய சப்-ஜூனியர் ஆக்கி போட்டி - சென்னையில் இன்று தொடக்கம்

கோப்புப்படம்
29 அணிகளும் ‘ஏ’, ‘பி’, ‘சி’ என 3 டிவிசனாக பிரிக்கப்பட்டுள்ளன.
சென்னை,
தமிழ்நாடு ஆக்கி அமைப்பு சார்பில் 15-வது தேசிய சப்-ஜூனியர் (17 வயதுக்கு உட்பட்டோர்) ஆக்கி சாம்பியன்ஷிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் இன்று (திங்கட்கிழமை) முதல் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 8-ந் தேதி வரை நடக்கிறது.
இதில் பங்கேற்கும் 29 மாநில அணிகள் 'ஏ', 'பி', 'சி' என 3 டிவிசனாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' டிவிசனில் இடம் பிடித்துள்ள 12 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதன் 'பி' பிரிவில் தமிழக அணி இடம் பிடித்துள்ளது. அரியானா, டையு டாமன் ஆகியவை அந்த பிரிவில் உள்ள மற்ற அணிகளாகும். ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும்.
லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு முன்னேறும். 'ஏ' டிவிசனில் கடைசி இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த ஆண்டு 'பி' டிவிசனுக்கு தரம் இறக்கப்படும். 'பி' டிவிசனில் 10 அணிகளும், 'சி' டிவிசனில் 7 அணிகளும் இடம் பெற்றுள்ளன. அவை தலா இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதும்.
'பி' டிவிசனில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் 'ஏ' டிவிசனுக்கு முன்னேறும். கடைசி 2 இடத்துக்கு தள்ளப்படும் அணி 'சி' டிவிசனுக்கு இறங்கும். 'சி' டிவிசனில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் 'பி' டிவிசனுக்கு ஏற்றம் காணும்.
தொடக்க நாளான இன்று நடைபெறும் ஆட்டங்களில் ராஜஸ்தான்-ஜம்மு காஷ்மீர் (காலை 6 மணி), பீகார்-மிசோரம் (காலை 7.30 மணி), உத்தரகாண்ட்-திரிபுரா (காலை 9 மணி), அருணாச்சலபிரதேசம்-குஜராத் (காலை 10.30 மணி), சத்தீஷ்கார்-கோவா (பகல் 12 மணி), கேரளா-ஆந்திரா (பகல் 1.30 மணி), மணிப்பூர்-தெலுங்கானா (பிற்பகல் 3 மணி) அணிகள் மோதுகின்றன.