ஜூனியர் உலகக் கோப்பை ஆக்கி: அனைத்து ஏற்பாடுகளும் தயார்...தமிழக அரசு அறிவிப்பு


ஜூனியர் உலகக் கோப்பை ஆக்கி:  அனைத்து ஏற்பாடுகளும் தயார்...தமிழக அரசு அறிவிப்பு
x
தினத்தந்தி 25 Nov 2025 7:30 AM IST (Updated: 25 Nov 2025 7:30 AM IST)
t-max-icont-min-icon

போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு முழுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சென்னை,

14-வது ஜூனியர் உலகக் கோப்பை ஆக்கி போட்டி (21 வயதுக்கு உட்பட்டோர்) சென்னை மற்றும் மதுரையில் வருகிற 28-ந் தேதி முதல் டிசம்பர் 10-ந் தேதி வரை நடக்கிறது.

இதில் நடப்பு சாம்பியன் ஜெர்மனி, இந்தியா, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, இங்கிலாந்து, பெல்ஜியம், தென்கொரியா உள்பட 24 அணிகள் கலந்து கொள்கின்றன. அவை 6 பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் மோதுகின்றன.

இதில் இந்திய அணி ‘பி’ பிரிவில் இடம் பிடித்துள்ளது. இந்திய அணி தனது முதலாவது ஆட்டத்தில் சிலியையும், (நவ.28), 2-வது ஆட்டத்தில் ஓமனையும் (நவ.29) சென்னையில் சந்திக்கிறது. 3-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் சுவிட்சர்லாந்தை (டிச.2) மதுரையில் எதிர்கொள்கிறது.

ஜூனியர் உலகக் கோப்பை போட்டியில் அதிக அளவில் அணிகள் பங்கேற்பதும், அதிக ஆட்டங்கள் அரங்கேறுவதும் இதுவே முதல்முறையாகும். சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் 41 ஆட்டங்களும், மதுரை ரேஸ்கோர்சில் அமைக்கப்பட்டுள்ள புதிய விளையாட்டரங்கில் 31 ஆட்டங்களும் நடைபெறுகின்றன. கால்இறுதியில் இருந்து எல்லா ஆட்டங்களும் சென்னையில் நடக்கிறது. இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

இந்த போட்டிக்காக நியூசிலாந்து அணி நேற்று சென்னை வந்தடைந்தது. இதுவரை 21 அணிகள் வந்துள்ளன. எஞ்சிய ஜப்பான், சிலி அணிகள் இன்றும், சீன அணி நாளையும் வருகின்றன.

போட்டிக்காக சென்னை மற்றும் மதுரையில் உள்ள ஸ்டேடியங்களில் இறுதி கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு தயார் நிலையில் இருக்கின்றன. போட்டி நடக்கும் சென்னையில் உள்ள மேயர் ராதாகிருஷணன் ஸ்டேடியத்தை நேற்று மாலை துணை முதல்-அமைச்சர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்ததுடன், ரசிகர்களுக்கு செய்யப்பட வேண்டிய வசதிகள் குறித்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு முழுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி போட்டி நடைபெறும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். ஸ்டேடியம் முழுவதும் கண்காணிப்பு கேமரா வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு பிரத்யேக போலீஸ் கட்டுப்பாட்டு அறை மூலம் கண்காணிக்கப்படும். மேலும் சாதாரண உடை அணிந்த போலீசாரும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள். ரசிகர்கள் சோதனைக்கு பிறகே ஸ்டேடியத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள். ஸ்டேடியத்தை சுற்றி 10 இடங்களில் பார்வையாளர்களின் வாகனங்கள் நிறுத்துவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது.

1 More update

Next Story