ஜூனியர் உலகக் கோப்பை ஆக்கி: இந்திய அணி கால்இறுதிக்கு தகுதி


ஜூனியர் உலகக் கோப்பை ஆக்கி: இந்திய அணி கால்இறுதிக்கு தகுதி
x

ஜூனியர் உலகக் கோப்பை ஆக்கி போட்டியில் இந்திய அணி சுவிட்சர்லாந்தை வீழ்த்தி கால்இறுதிக்கு தகுதி பெற்றது.

14-வது ஜூனியர் ஆண்கள் உலகக் கோப்பை ஆக்கி போட்டி (21 வயதுக்கு உட்பட்டோர்) சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியம் மற்றும் மதுரை ரேஸ்கோர்சில் உள்ள சர்வதேச ஆக்கி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 24 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடிக்கும் அணிகள், 2-வது இடம் பெறும் இரண்டு சிறந்த அணிகள் என 8 அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெறும். 5-வது நாளான நேற்று கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் நடந்தன.

இதில் மதுரையில் நடந்த ஒரு ஆட்டத்தில் ஸ்பெயின்- நமிபியா அணிகள் மோதின. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஸ்பெயின் 13-0 என்ற கோல் கணக்கில் நமிபியாவை பந்தாடி 3-வது வெற்றியை சுவைத்தது. ஸ்பெயின் அணியில் புருனோ அவிலா 4 கோல் அடித்தார். இதே போல் பெல்ஜியம் அணி 10-0 என்ற கோல் கணக்கில் எகிப்தை தோற்கடித்து 2-வது வெற்றியை பெற்றது.

‘டி’ பிரிவில் லீக் சுற்று முடிவில் ஸ்பெயின் 9 புள்ளிகளுடன் முதலிடமும், பெல்ஜியம் 6 புள்ளிகளுடன் 2-வது இடமும் பிடித்து கால்இறுதிக்கு முன்னேறின. நமிபியா 3-வது இடமும், எகிப்து கடைசி இடமும் பெற்று நாக்-அவுட் சுற்று வாய்ப்பை இழந்தன.

இறுதி லீக்கில் இந்தியா- சுவிட்சர்லாந்து அணிகள் ஆட்டத்தில் இந்தியா 5-0 என்ற கோல் கணக்கில் சுவிட்சர்லாந்தை வீழ்த்தி தொடர்ந்து 3-வது வெற்றியை ருசித்து கால்இறுதியை எட்டியது.

1 More update

Next Story