ஜோஹர் கோப்பை ஜூனியர் ஆக்கி: வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி

கோப்புப்படம்
ஜோஹர் கோப்பைக்கான சர்வதேச ஜூனியர் ஆக்கி (21 வயதுக்கு உட்பட்டோர்) போட்டி மலேசியாவில் உள்ள ஜோஹர் பாரு நகரில் நேற்று தொடங்கியது.
ஜோஹர் பாரு,
ஜோஹர் கோப்பைக்கான சர்வதேச ஜூனியர் ஆக்கி (21 வயதுக்கு உட்பட்டோர்) போட்டி மலேசியாவில் உள்ள ஜோஹர் பாரு நகரில் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 6 அணிகள் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.
இதன் தொடக்க லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான இந்திய அணி, நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 3-2 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி போட்டியை வெற்றியுடன் தொடங்கியது.
இந்திய அணியில் ரவ்னீத் சிங் 23-வது நிமிடத்திலும், கேப்டன் ரோகித் 45-வது மற்றும் 52-வது நிமிடங்களிலும் கோலடித்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் மைக்கேல் ராய்டன் 26-வது நிமிடத்திலும், கேடன் டிரேசி 46-வது நிமிடத்திலும் கோல் திருப்பினர். இந்திய அணி இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் நியூசிலாந்தை சந்திக்கிறது.






