இந்திய பெண்கள் ஆக்கி அணி பயிற்சியாளர் ராஜினாமா

இந்திய பெண்கள் ஆக்கி அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக நெதர்லாந்தை சேர்ந்த சிஜோர்ட் மரிஜின் நியமிக்கப்படுவார் என்று தெரிகிறது
புதுடெல்லி,
இந்திய பெண்கள் ஆக்கி அணியின் தலைமை பயிற்சியாளராக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இருந்து வந்த ஹரேந்திர சிங் தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார்.
இது குறித்து ஹரேந்திர சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்திய பெண்கள் ஆக்கி அணிக்கு பயிற்சி அளித்தது எனது வாழ்க்கையில் ஒரு சிறப்பம்சமாகும். தனிப்பட்ட காரணங்களுக்கான பயிற்சியாளர் பணியில் இருந்து விலகினாலும், இந்த அசாதாரணமான அணியுடனே எனது இதயம் நிலைத்திருக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க ஆக்கி அணியின் பயிற்சியாளராகவும் பணியாற்றி இருக்கும் ஹரேந்திர சிங் முன்னதாக 2016-ம் ஆண்டு லக்னோவில் நடந்த ஜூனியர் உலகக் கோப்பை ஆக்கி போட்டியில் இந்திய ஆண்கள் அணிக்கு பயிற்சியாளராக இருந்துள்ளார். ஹரேந்திர சிங் பயிற்சியின் கீழ் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையை இந்திய பெண்கள் அணி வென்று இருந்தாலும், 2024-25-ம் ஆண்டுக்கான புரோ லீக் போட்டியில் 16 ஆட்டங்களில் ஆடி இரண்டில் மட்டுமே வெற்றி பெற்று கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டு, அடுத்த ஆண்டுக்கான போட்டிக்கு தகுதி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஹரேந்திர சிங் விலகலை அடுத்து இந்திய பெண்கள் ஆக்கி அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக நெதர்லாந்தை சேர்ந்த சிஜோர்ட் மரிஜின் நியமிக்கப்படுவார் என்று தெரிகிறது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய பெண்கள் அணி 4-வது இடம் பெற்றபோது அவர் தலைமை பயிற்சியாளராக இருந்தார்.






