ஆஸ்திரேலியா பயணிக்கும் இந்திய ஆக்கி அணி - தலைமை பயிற்சியாளர் கூறியது என்ன..?

கோப்புப்படம்
இந்திய ஆக்கி அணி, அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
புதுடெல்லி,
இந்திய ஆக்கி அணி, அடுத்த மாதம் (ஆகஸ்டு) ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. ஆஸ்திரேலியா-இந்தியா அணிகள் இடையிலான ஆக்கி போட்டிகள் பெர்த்தில் முறையே ஆகஸ்டு 15, 16, 19, 21 ஆகிய தேதிகளில் நடக்கிறது. ஆசிய கோப்பை ஆக்கி போட்டி பீகார் மாநிலத்தில் உள்ள ராஜ்கிர் நகரில் ஆகஸ்டு 29-ந் தேதி முதல் செப்டம்பர் 7-ந் தேதி வரை நடக்கிறது.
அடுத்த ஆண்டு நடைபெறும் உலகக் கோப்பை போட்டிக்கு நேரடி தகுதி சுற்றான ஆசிய கோப்பை போட்டிக்கு தயாராகும் பொருட்டு உலக தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ள இந்திய அணி இந்த போட்டியில் ஆடுகிறது.
உலக தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடர் குறித்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கிரேக் புல்டான் கூறியதாவது, பீகாரில் நடைபெறும் ஆசிய கோப்பை போட்டிக்கு முன்னதாக ஒரு முக்கியமான தருணத்தில் இந்த சுற்றுப்பயணம் எங்களுக்கு வருகிறது. இது தொழில்நுட்ப ரீதியாக நட்புறவு போட்டி என்றாலும் எங்களது தயார்படுத்துதல் கட்டத்தில் மிகவும் முக்கியமான பகுதியாகும்.
ஆஸ்திரேலியா போன்ற அணிக்கு எதிராக ஆடுவது எங்களை எல்லா வகையிலும் சோதிக்கும். ஒரு பெரிய போட்டிக்கு முன்பாக நம்மை சரியாக தயார்படுத்துவதற்கு இது தேவையான ஒன்றாகும். எங்களது பயிற்சி முகாமில் இருக்கும் வீரர்கள் உற்சாகமான மனநிலையில் உள்ளனர். நாங்கள் எதிர் வரும் போட்டிகள் குறித்து முழுமையான கவனம் செலுத்தி வருகிறோம்.
இந்த தொடரில் முதல் இரு ஆட்டங்களை அணி தேர்வுக்கு பயன்படுத்துவதும், எஞ்சிய ஆட்டங்களில் ஆசிய கோப்பை போட்டிக்காக இறுதி செய்யும் அணியுடன் விளையாடுவதும் எங்களுடைய நோக்கமாகும். தற்போது எங்களது கவனம் எல்லாம் நன்கு தயாராகி, வெற்றி பெறும் ஆர்வத்துடன் ஆசிய கோப்பை போட்டிக்கு செல்வதில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.