இந்திய ஆக்கி வீரர் லலித் உபாத்யாய் ஓய்வு

கோப்புப்படம்
லலித் உபாத்யாய் இந்திய அணிக்காக 183 சர்வதேச போட்டிகளில் ஆடி 67 கோல்கள் அடித்துள்ளார்.
புதுடெல்லி,
இந்திய ஆக்கி அணியின் சிறந்த முன்கள வீரர்களில் ஒருவரான லலித் உபாத்யாய் 2014-ம் ஆண்டு சர்வதேச போட்டியில் அறிமுகமானார். உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியை சேர்ந்த 31 வயதான லலித் உபாத்யாய், நடப்பு புரோ ஆக்கி லீக் போட்டியின் ஐரோப்பிய சுற்றுக்கான இந்திய அணியில் இடம் பிடித்து இருந்தார்.
பெல்ஜியத்தின் ஆன்ட்வெர்ப்பில் நேற்று முன்தினம் நடந்த லீக் ஆட்டத்தில் இந்திய அணி 4-3 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்துக்கு பதிலடி கொடுத்து ஆறுதல் வெற்றி பெற்றது. ஐரோப்பிய சுற்றில் முந்தைய 7 ஆட்டங்களில் தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்து இருந்த இந்திய அணி 8-வது இடத்துக்கு தள்ளப்பட்டது.
ஆன்ட்வெர்ப்பில் கடந்த 15-ந் தேதி நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் கடைசியாக களம் கண்ட லலித் உபாத்யாய் சர்வதேச ஆக்கி போட்டியில் இருந்து விடைபெறுவதாக சமூக வலைதளம் மூலம் நேற்று அறிவித்தார். அவர் தனது பதிவில்,
இந்த பயணம் ஒரு சிறிய கிராமத்தில் இருந்து குறைந்த வளங்களுடனும், அதேநேரத்தில் எல்லையற்ற கனவுகளுடனும் தொடங்கியது. ஒரு ஸ்டிங் ஆபரேஷனை எதிர்கொண்டதில் இருந்து இரண்டு முறை ஒலிம்பிக் மேடையில் ஏறியது வரை எனது பாதை சவால்களும், வளர்ச்சியும், மறக்க முடியாத தருணங்களும் நிறைந்ததாகும்.
26 ஆண்டுகளுக்கு பிறகு எனது நகரத்தில் இருந்து ஒலிம்பியனாக உருவெடுத்தது அற்புதமானது. இந்த கவுரவத்தையும், நன்றி உணர்வையும் எப்போதும் எடுத்து செல்வேன்' என்று தெரிவித்துள்ளார்.
டோக்கியோ (2020) மற்றும் பாரீஸ் (2024) ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய அணியில் அங்கம் வகித்த லலித் உபாத்யாய் இந்திய அணிக்காக 183 சர்வதேச போட்டிகளில் ஆடி 67 கோல்கள் அடித்துள்ளார். மேலும் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை, ஆசிய கோப்பை, ஆசிய விளையாட்டு, சாம்பியன்ஸ் கோப்பை போட்டிகளில் இந்திய அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்துள்ளார்.