ஜூனியர் உலகக் கோப்பை ஆக்கி: ஜெர்மனி, அர்ஜென்டினா அணிகள் கால்இறுதிக்கு தகுதி


ஜூனியர் உலகக் கோப்பை ஆக்கி: ஜெர்மனி, அர்ஜென்டினா  அணிகள் கால்இறுதிக்கு தகுதி
x

ஆக்கியில் லீக் ஆட்டத்தில் அயர்லாந்தை தோற்கடித்து ஜெர்மனி அணி கால்இறுதிக்கு முன்னேறியது.

14-வது ஜூனியர் ஆண்கள் உலகக் கோப்பை ஆக்கி போட்டி (21 வயதுக்கு உட்பட்டோர்) சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியம் மற்றும் மதுரை ரேஸ்கோர்சில் உள்ள சர்வதேச ஆக்கி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

தமிழகத்தில் முதல்முறையாக நடைபெறும் இந்த போட்டியில் பங்கேற்றுள்ள 24 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்த போட்டி தொடரில் மதுரையில் நடந்த ஒரு ஆட்டத்தில் ஜெர்மனி அணி 5-1 என்ற கோல் கணக்கில் அயர்லாந்தை தோற்கடித்து ‘ஹாட்ரிக்’ வெற்றியை ருசித்தது. ஜெர்மனி அணியில் ஜோனஸ் வோன் ஜெர்சும், பால் கிளான்டெர், லூகாஸ் கோசெல், கிறிஸ்டியன் பிரான் கோலடித்தனர்

இதே பிரிவில் மாலையில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்க அணி 9-1 என்ற கோல் கணக்கில் கனடாவை விரட்டியடித்தது. தென்ஆப்பிரிக்க அணியில் ஜெய்டன் புரூகெர் 4 கோல் போட்டு கலக்கினார்.

‘ஏ’ பிரிவில் லீக் ஆட்டங்கள் முடிவில் ஜெர்மனி 9 புள்ளிகளுடன் (3 ஆட்டங்களிலும் வெற்றி) முதலிடம் பிடித்து கால்இறுதிக்கு முன்னேறியது. தென்ஆப்பிரிக்க அணி 6 புள்ளிகளுடன் (2 வெற்றி, ஒரு தோல்வி) 2-வது இடம் பெற்று கால்இறுதி வாய்ப்பில் நீடிக்கிறது. அயர்லாந்து (ஒரு வெற்றி, 2 தோல்வி) 3-வது இடமும், கனடா (3 ஆட்டங்களிலும் தோல்வி) கடைசி இடமும் பெற்று கால்இறுதி வாய்ப்பை இழந்தன.

சென்னையில் நடந்த ஒரு ஆட்டத்தில் தரவரிசையில் 12-வது இடம் வகிக்கும் நியூசிலாந்து, 17-வது இடத்தில் உள்ள ஜப்பானுடன் மோதியது. முடிவில் நியூசிலாந்து அணி 3-2 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி 2-வது வெற்றியை தனதாக்கியது. பலத்த மழை காரணமாக ஒரு மணி நேரத்துக்கு மேலாக இந்த ஆட்டம் தடைபட்டது குறிப்பிடத்தக்கது.

இதைத் தொடர்ந்து நடந்த மற்றொரு ஆட்டத்தில் (சி பிரிவு) அர்ஜென்டினா 3-1 என்ற கோல் கணக்கில் சீனாவை வெளியேற்றியது. இந்த பிரிவில் அர்ஜென்டினா, நியூசிலாந்து தலா 7 புள்ளிகளுடன் (2 வெற்றி, ஒரு டிரா) சமநிலை வகித்த போதிலும் கோல் வித்தியாசம் அடிப்படையில் அர்ஜென்டினா கால்இறுதி வாய்ப்பை உறுதி செய்தது.

1 More update

Next Story