அஸ்லான் ஷா கோப்பை ஆக்கி: இந்திய அணி அறிவிப்பு

image courtesy:twitter/@TheHockeyIndia
இந்திய அணி தனது முதலாவது ஆட்டத்தில் தென் கொரியாவை எதிர்கொள்கிறது.
புதுடெல்லி,
சுல்தான் அஸ்லான் ஷா கோப்பைக்கான சர்வதேச அழைப்பு ஆக்கி போட்டி மலேசியாவில் உள்ள இபோ நகரில் வருகிற 23-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை நடக்கிறது. இதில் இந்தியா உள்பட 6 அணிகள் கலந்து கொண்டு ரவுண்ட் ராபின் லீக் முறையில் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு ஏற்றம் பெறும். முன்னாள் சாம்பியனான இந்திய அணி தனது முதலாவது ஆட்டத்தில் 23-ந் தேதி தென்கொரியாவையும், 24-ந் தேதி பெல்ஜியத்தையும், 26-ந் தேதி மலேசியாவையும், 27-ந் தேதி நியூசிலாந்தையும், 29-ந் தேதி கனடாவையும் எதிர்கொள்கிறது.
இந்த போட்டியில் பங்கேற்கும் இந்திய ஆக்கி அணி நேற்று அறிவிக்கப்பட்டது. வழக்கமான கேப்டன் ஹர்மன்பிரீத் சிங்குக்கு இந்த தொடரில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. புதிய கோல் கீப்பர்களாக பவன், மொகித் ஹொன்னஹள்ளி சசிகுமார் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். புதிய கேப்டனாக சஞ்சய் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய ஆக்கி அணி விவரம் பின்வருமாறு:-
கோல் கீப்பர்கள்: பவன், மொகித் ஹொன்னஹள்ளி சசிகுமார்.
பின்களம்: சந்துரா பாபி, நீலம் சஞ்சீப், யாஷ்தீப் சிவாச், சஞ்சய், ஜூக்ராஜ் சிங், அமித் ரோஹிதாஸ்.
நடுகளம்: ரஜிந்தர் சிங், ராஜ்குமார் பால், நீலகண்ட ஷர்மா, மொய்ராங்தெம் சிங், விவேக் சாகர் பிரசாத், முகமது ரகீல் மொய்சீன்.
முன்களம்: சுக்ஜீத் சிங், ஷிலானந்த் லக்ரா, செல்வம் கார்த்தி, ஆதித்யா அர்ஜூன் லலாகே, தில்பிரீத் சிங், அபிஷேக்.






