ஆசிய கோப்பை ஆக்கி: இந்தியா-தென்கொரியா இன்று பலப்பரீட்சை

Image Courtacy: HockeyIndiaTwitter
சூப்பர்4 சுற்று ஆட்டத்தில் இந்தியா - தென்கொரியா அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
ராஜ்கிர்,
12-வது ஆசிய கோப்பை ஆக்கி போட்டி பீகார் மாநிலம் ராஜ்கிர் நகரில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின. லீக் சுற்று முடிவில் ‘ஏ’ பிரிவில் இந்தியா (3 வெற்றி) முதலிடமும், சீனா (ஒரு வெற்றி, ஒரு டிரா, ஒரு தோல்வி) 2-வது இடமும், ‘பி’ பிரிவில் மலேசியா (3 வெற்றி) முதலிடமும், தென்கொரியா (2 வெற்றி, ஒரு தோல்வி) 2-வது இடமும் பிடித்து ‘சூப்பர்4’ சுற்றுக்கு முன்னேறின.
இந்நிலையில் இன்று (புதன்கிழமை) ‘சூப்பர்4’ சுற்று ஆரம்பமாகிறது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். ‘சூப்பர் 4’ சுற்றில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான இந்திய அணி, நடப்பு சாம்பியன் தென்கொரியாவுடன் மல்லுகட்டுகிறது.
ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி லீக் சுற்றில் சீனா (4-3), ஜப்பான் (3-2), கஜகஸ்தான் (15-0) அணிகளை அடுத்தடுத்து போட்டுத் தாக்கியது. இதனால் இந்திய அணி கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்கும். கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் (7 கோல்), அபிஷேக் (4 கோல்) சூப்பர் பார்மில் உள்ளனர்.
5 முறை சாம்பியனான தென்கொரிய அணி 7-0 என்ற கோல் கணக்கில் சீன தைபேயையும், 5-1 என்ற கோல் கணக்கில் வங்காளதேசத்தையும் தோற்கடித்தது. மலேசியாவிடம் 1-4 என்ற கோல் கணக்கில் பணிந்தது. அபாயகரமான அணியாக கருதப்படும் தென்கொரியாவிடம் இருந்து இன்னும் சிறந்த ஆட்டம் வெளியாகவில்லை. பிற்பகலில் லீக் சுற்று நடந்ததால் வெயிலின் தாக்கத்தால் அந்த அணி தடுமாறியது. இனி வரும் ஆட்டங்கள் மாலை நேரத்தில் அரங்கேறுவதால் அந்த அணியிடம் இருந்து உண்மையான சவாலை எதிர்பார்க்கலாம். மொத்தத்தில் வலுவான இரு அணிகள் வரிந்து கட்டுவதால் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
முன்னதாக மாலை 5 மணிக்கு நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 12-வது இடத்தில் இருக்கும் மலேசியா, 22-வது இடத்தில் உள்ள சீனாவை சந்திக்கிறது.