ஆசிய கோப்பை ஆக்கி: இந்தியா-தென்கொரியா ஆட்டம் ‘டிரா'

முதல் பாதியில் 2-1 என்ற கணக்கில் கொரியா முன்னிலை பெற்றது.
ராஜ்கிர்,
12-வது ஆசிய கோப்பை ஆக்கி போட்டி பீகார் மாநிலம் ராஜ்கிர் நகரில் நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்ற இந்த ஆக்கி திருவிழாவில் லீக் சுற்று முடிவில் ‘ஏ’ பிரிவில் இந்தியா, சீனாவும், ‘பி’ பிரிவில் மலேசியா, தென்கொரியாவும் சூப்பர்4 சுற்றை எட்டின.
சூப்பர்4 சுற்றில் ஒவ்வொரு அணியும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.
இந்த நிலையில் சூப்பர்4 சுற்றில் இந்திய அணி, நடப்பு சாம்பியன் தென்கொரியாவுடன் நேற்றிரவு கோதாவில் குதித்தது. இந்த ஆட்டத்தில் எதிர்பார்த்தது போலவே தென்கொரிய வீரர்கள் கடும் நெருக்கடி கொடுத்தனர் முதல் பாதியில் 2-1 என்ற கணக்கில் கொரியா முன்னிலை பெற்றது.
ஆட்டத்தை சமனுக்கு கொண்டு வர இந்திய வீரர்கள் கடுமையாக போராடினர். இறுதியாக 53-வது நிமிடத்தில் மன்தீப்சிங் கோல் போட்டு உள்ளூர் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். கடைசி கட்டத்தில் கிடைத்த சில வாய்ப்புகளை கோலாக்க முடியவில்லை. அத்துடன் நிறைய பெனால்டி கார்னர் வாய்ப்புகளை வீணடித்தனர். முடிவில் ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.
முன்னதாக நடந்த மற்றொரு ஆட்டத்தில் மலேசியா 2-0 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தியது.இன்று நடக்கும் ஆட்டங்களில் தென்கொரியா- சீனா (மாலை 5.30 மணி), இந்தியா- மலேசியா (7.30 மணி) அணிகள் மோதுகின்றன. இறுதிப்போட்டி வாய்ப்பில் நீடிக்க இந்திய அணி இன்றைய ஆட்டத்தில் கட்டாயம் வென்றாக வேண்டும்.