ஆசிய கோப்பை ஆக்கி: இந்தியா-ஜப்பான் இன்று மோதல்

நடப்பு சாம்பியன் தென்கொரியா அணி, மலேசியாவுடன் மல்லுக்கட்டியது.
ராஜ்கிர்,
12-வது ஆசிய கோப்பை ஆக்கி போட்டி பீகார் மாநிலம் ராஜ்கிர் நகரில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறும். அதில் இருந்து இரு அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழையும்.
இதில் 2-வது நாளான நேற்று நடந்த ‘பி’ பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் தென்கொரியா அணி, மலேசியாவுடன் மல்லுக்கட்டியது.
இந்த ஆட்டத்தில் மலேசிய அணி 4-1 என்ற கோல் கணக்கில் தென்கொரியாவுக்கு அதிர்ச்சி அளித்து தொடர்ச்சியாக 2-வது வெற்றியை ருசித்தது. தென்கொரியா சந்தித்த முதல் தோல்வி இதுவாகும்.
முன்னதாக இதேபிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய வங்காளதேசம் 8-3 என்ற கோல் கணக்கில் சீன தைபே அணியை பந்தாடியது.
இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் 3 முறை சாம்பியனும், உலக தரவரிசையில் 7-வது இடத்தில் இருக்கும் அணியான இந்தியா, 18-வது இடத்தில் உள்ள ஜப்பான் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. இந்திய அணி தனது முதலாவது ஆட்டத்தில் சீனாவை (4-3) போராடி வென்றது. ஜப்பான் அணி தனது முந்தைய ஆட்டத்தில் கஜகஸ்தானை (7-0) துவம்சம் செய்தது. கடந்த ஆட்டத்தில் எதிர்பார்ப்புக்கு ஏற்ப ஆடாத இந்திய அணி, வலுவான ஜப்பானின் சவாலை சமாளிக்க தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியமானதாகும். பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் இந்த ஆட்டத்தை சோனி ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. முன்னதாக நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் சீனா-கஜகஸ்தான் அணிகள் (பகல் 1 மணி) சந்திக்கின்றன.