ஆசிய கோப்பை ஆக்கி: சீனாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது இந்தியா


ஆசிய கோப்பை ஆக்கி: சீனாவை வீழ்த்தி  இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது இந்தியா
x

சூப்பர் 4 சுற்று முடிவில் இந்திய அணி 7 புள்ளியுடன் முதலிடமும், தென்கொரியா 4 புள்ளியுடன் 2-வது இடமும் பிடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறின

ராஜ்கிர்,

12-வது ஆசிய கோப்பை ஆக்கி போட்டி பீகார் மாநிலம் ராஜ்கிர் நகரில் நடந்து வருகிறது. 8 அணிகள் இடையிலான இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் சூப்பர்4 சுற்றை எட்டிய இந்தியா, தென்கொரியா, மலேசியா, சீனா அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோதின.

இதில் சூப்பர்4 சுற்றில் நேற்று இரவு நடந்த கடைசி ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் இந்திய அணி, சீனாவை எதிர்கொண்டது. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 7-0 என்ற கோல் கணக்கில் சீனாவை பந்தாடி 2-வது வெற்றியை ருசித்தது.

இந்திய அணியில் ஷிலானந்த் லக்ரா (4-வது நிமிடம்), தில்பிரீத் சிங் (7-வது நிமிடம்), மன்தீப் சிங் (18-வது நிமிடம்), ராஜ்குமார் (37-வது நிமிடம்), சுக்ஜீத் சிங் (39-வது நிமிடம்), அபிஷேக் (46-வது, 50-வது நிமிடம்) கோலடித்தனர்.

சூப்பர் 4 சுற்று முடிவில் இந்திய அணி 7 புள்ளியுடன் முதலிடமும், தென்கொரியா 4 புள்ளியுடன் 2-வது இடமும் பிடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறின. மலேசியா (3 புள்ளி) 3-வது இடமும், சீனா (3 புள்ளி) 4-வது இடமும் பெற்று இறுதிப்போட்டி வாய்ப்பை பறிகொடுத்தன.

இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா-தென்கொரியா அணிகள் (இரவு 7.30 மணி) மல்லுக்கட்டுகின்றன. இதில் வெற்றி பெற்று அணி சாம்பியன் பட்டம் வெல்வதுடன் அடுத்த ஆண்டு நடைபெறும் உலகக் கோப்பை போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும். முன்னதாக மாலை 5 மணிக்கு நடைபெறும் 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் மலேசியா-சீனா அணிகள் சந்திக்கின்றன.

1 More update

Next Story