அகில இந்திய ஆக்கி: தமிழக அணி முதல் வெற்றி

2-வது நாளான நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் தமிழ்நாடு அணி, இந்திய ராணுவத்தை எதிர்கொண்டது.
சென்னை,
எம்.சி.சி. - முருகப்பா தங்க கோப்பைக்கான 96-வது அகில இந்திய ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஆக்கி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன.
2-வது நாளான நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் தமிழ்நாடு அணி, இந்திய ராணுவத்தை எதிர்கொண்டது. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய தமிழக அணி 5-1 என்ற கோல் கணக்கில் இந்திய ராணுவத்தை தோற்கடித்தது. தமிழக அணியில் சதீஷ் 14-வது நிமிடத்திலும், பத்ராஸ் திர்கே 32-வது நிமிடத்திலும், பாலச்சந்தர் 34-வது, 59-வது நிமிடத்திலும், மனோஜ் குமார் 57-வது நிமிடத்திலும் கோலடித்தனர். ராணுவ அணியில் ஆதிஷ் டோட்ரி (42-வது நிமிடம்) ஆறுதல் கோல் அடித்தார். தமிழக அணி பெற்ற முதல் வெற்றி இதுவாகும். முதல் ஆட்டத்தில் மராட்டியத்துடன் டிரா கண்டிருந்தது.