அகில இந்திய ஆக்கி: தமிழ்நாடு- என்.சி.ஓ.இ ஆட்டம் 'டிரா'

கோப்புப்படம்
96-வது அகில இந்திய ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஆக்கி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.
சென்னை,
எம்.சி.சி.- முருகப்பா தங்க கோப்பைக்கான 96-வது அகில இந்திய ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஆக்கி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. 4-வது நாளான நேற்று நடந்த தமிழ்நாடு- போபால் என்.சி.ஓ.இ. அணிகள் (ஏ பிரிவு) இடையிலான பரபரப்பான ஆட்டம் 4-4 என்ற கோல் கணக்கில் 'டிரா' வில் முடிந்தது.
தமிழ்நாடு அணியில் சோமன்னா (15-வது, 41-வது நிமிடம்) 2 கோலும், பத்ராஸ் திர்கே (3-வது நிமிடம்), பாலசந்தர் (44-வது நிமிடம்) தலா ஒரு கோலும் அடித்தனர். போபால் அணியில் முகமது சயத் கான் 20-வது நிமிடத்திலும், மன்ஜீத் 26-வது நிமிடத்திலும், மனிஷ் சஹானி 29-வது நிமிடத்திலும், அமித் யாதவ் 47-வது நிமிடத்திலும் கோல் போட்டனர்.
மற்றொரு ஆட்டத்தில் இந்திய ராணுவம் அணி 4-2 என்ற கோல் கணக்கில் கர்நாடகாவை வீழ்த்தியது. இந்திய ராணுவத்தில் சுஷில் தன்வர் (3-வது, 20-வது, 34-வது நிமிடம்) 'ஹாட்ரிக்' கோல் அடித்தார். இன்னொரு ஆட்டத்தில் மலேசிய ஜூனியர் அணி 4-3 என்ற கோல் கணக்கில் மத்திய நேரடி வரிகள் வாரிய அணியை தோற்கடித்தது. ஆட்டம் 3-3 என டிராவை நோக்கி நகர்ந்த நிலையில் கடைசி நிமிடத்தில் அஸிமுத்தின் ஷகிர் அடித்த கோல் மலேசியாவுக்கு வெற்றியை தேடித்தந்தது.