அகில இந்திய ஆக்கி: இறுதிப்போட்டியில் ரெயில்வே - இந்திய கடற்படை அணிகள் மோதல்

கோப்புப்படம்
96-வது அகில இந்திய ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஆக்கி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.
சென்னை,
எம்.சி.சி.-முருகப்பா தங்க கோப்பைக்கான 96-வது அகில இந்திய ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஆக்கி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்தியன் ரெயில்வே அணி, இந்தியன் ஆயிலை எதிர்கொண்டது.
தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ரெயில்வே அணி 7-1 என்ற கோல் கணக்கில் இந்தியன் ஆயிலை விரட்டியடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ரெயில்வே அணியில் தர்ஷன் கவ்கர் (5-வது, 10-வது நிமிடம்), பங்கஜ் ராவத் (17-வது, 51-வது, 54-வது நிமிடம்), ஷிவம் ஆனந்த் (30-வது நிமிடம்), ஹர்தாஜ் அஜ்லா (44-வது நிமிடம்) கோல் போட்டனர். இந்தியன் ஆயில் அணியில் அபான் யூசுப் 6-வது நிமிடத்தில் ஆறுதல் கோல் திருப்பினார்.
மற்றொரு அரையிறுதியில் இந்திய கடற்படை அணி 2-0 என்ற கோல் கணக்கில் இந்திய ராணுவத்தை வீழ்த்தி இறுதிபோட்டிக்குள் அடியெடுத்து வைத்தது. கடற்படை அணியில் ஆஷிஷ் டாப்னோ (31-வது நிமிடம்), ரஜத் மின்ஸ் (57-வது நிமிடம்) கோலடித்தனர். இன்று நடைபெறும் மகுடத்துக்கான இறுதிப்போட்டியில் இந்தியன் ரெயில்வே-இந்திய கடற்படை (மாலை 6.15 மணி) அணிகள் மோதுகின்றன.