அகில இந்திய ஆக்கி: ரெயில்வே அணி 2-வது வெற்றி

கோப்புப்படம்
96-வது அகில இந்திய ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.
சென்னை,
எம்.சி.சி.- முருகப்பா தங்க கோப்பைக்கான 96-வது அகில இந்திய ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன.
5-வது நாளான நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் இந்தியன் ரெயில்வே அணி 4-2 என்ற கோல் கணக்கில் மராட்டியத்தை வீழ்த்தி தொடர்ச்சியாக 2-வது வெற்றியை பெற்றது. ரெயில்வே அணியில் குர்ஜகிப்ஜித் சிங், தர்ஷன் கவ்கர், ஷிஷி கவுடா, சண்முகமும், மராட்டிய அணியில் கணேஷ் பட்டீல், ரோஹன் பட்டீலும் கோலடித்தனர்.
மற்றொரு ஆட்டத்தில் இந்திய ராணுவம் 1-0 என்ற கோல் கணக்கில் போபால் என்.சி.ஓ.இ. அணியை வீழ்த்தி முதலாவது வெற்றியை பதிவு செய்தது. ராணுவ வீரர் அக்ஷய் துபே முதல் நிமிடத்தில் அடித்த கோல் வெற்றியை நிர்ணயிப்பதாக அமைந்தது.
இன்று நடைபெறும் ஆட்டங்களில் இந்தியன் ஆயில்-மலேசியா ஜூனியர் (மாலை 4.15 மணி), இந்தியன் ரெயில்வே-தமிழ்நாடு (மாலை 6 மணி) அணிகள் மோதுகின்றன.