மகளிர் உலகக்கோப்பை: இலங்கை - பாகிஸ்தான் ஆட்டம் மழையால் ரத்து

டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
கொழும்பு,
13-வது மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். அதன்படி, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, இந்தியா ஆகிய 4 அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதிபெற்றுவிட்டன. இந்நிலையில், லீக் சுற்று இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் இன்று நடைபெற்ற 25வது லீக் ஆட்டத்தில் இலங்கை - பாகிஸ்தான் மோதின . இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது.அதில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் சமீரா அதபது பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய இருந்தது. ஆனால் திடீரென மழை குறுக்கிட்டது. இதனால் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது . இந்த நிலையில் மழை நின்றதால் சில மணி நேரம் தாமதத்துக்கு பின்னர் ஆட்டம் தொடங்கி நடைபெற்றது. இந்த ஆட்டம் 34 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
தொடக்க வீராங்கனைகளாக முனீபா அலி, ஒனைமா சோஹைல் ஆகியோர் களமிறங்கினர். பாகிஸ்தான் அணி 4.2 ஓவர்களுக்கு விக்கெட் இழப்பின்றி 18 ரன்கள் எடுத்திருந்த போது மழை மீண்டும் குறுக்கிட்டது.
இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. மழை தொடர்ந்து பெய்ததால் ஆட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.






