யு19 உலகக்கோப்பை கிரிக்கெட்: வங்காளதேசத்தை வீழ்த்தி இந்தியா வெற்றி


யு19 உலகக்கோப்பை கிரிக்கெட்: வங்காளதேசத்தை வீழ்த்தி இந்தியா வெற்றி
x

இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தி வெற்றி பெற்றது.

புலவாயோ,

16-வது இளையோர் (19 வயதுக்கு உட்பட்டோர்) உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் பங்கேற்றுள்ள 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. இதில் புலவாயோவில் நேற்று நடந்த 7-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான இந்திய அணி, வங்காளதேசத்தை (பி பிரிவு) எதிர்கொண்டது.

இதில் ‘டாஸ்’ வென்ற வங்காளதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. கேப்டன் ஆயுஷ் மாத்ரே 6 ரன்களிலும், வேதாந்த் திரிவேதி ரன் எதுவும் எடுக்காமலும், விஹான் மல்கோத்ரா 7 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து அபிக்யான் குண்டு, வைபவ் சூர்யவன்ஷியுடன் கைகோர்த்தார். இருவரும் சிறப்பாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

அதிரடியாக ஆடிய சூர்யவன்ஷி 30 பந்துகளில் அரைசத்தை எட்டினார். இதன் மூலம் 14 வயது சூர்யவன்ஷி இளையோர் உலகக் போட்டியில் அரைசதம் அடித்த இளம் வீரர் என்ற பெருமையை பெற்றார். சூர்யவன்ஷி 72 ரன்களில் (67 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்) கேட்ச் ஆனார். 39-வது ஓவரின்போது மழையால் பாதிப்பு ஏற்பட்டதால் ஆட்டம் 49 ஓவராக குறைக்கப்பட்டது. அபிக்யான் குண்டு 80 ரன்களில் கேட்ச்சானார். 48.4 ஓவர்களில் இந்திய அணி 238 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. வங்காளதேசம் தரப்பில் அல் பஹத் 5 விக்கெட்டுகளை அள்ளினார்.

இதனையடுத்து வங்காளதேச அணி ஆடிய போது 2 முறை மழை குறுக்கிட்டு ஆட்டம் பாதிக்கப்பட்டதால் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி அந்த அணி 29 ஓவர்களில் 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்கு மாற்றியமைக்கப்பட்டது. இதனை நோக்கி தொடர்ந்து ஆடிய வங்காளதேச அணி 28.3 ஓவர்களில் 146 ரன்களில் அடங்கியது. இதனால் இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக கேப்டன் அஜிசுல் ஹக்கிம் 51 ரன்கள் சேர்த்தார்.

இந்திய அணி தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் விஹான் மல்கோத்ரா 4 விக்கெட்டுகளும், கிலான் பட்டேல் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். விஹான் மல்கோத்ரா ஆட்டநாயகன் விருது பெற்றார். இந்திய அணி தொடர்ந்து 2-வது வெற்றி பெற்றது.

1 More update

Next Story