2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி

போட்டியை வீட்டில் இருந்தபடி பார்ப்பது புதுமையாக இருக்கும் என ரோகித் சர்மா கூறினார்.
புதுடெல்லி,
இந்தியாவில் 20 ஓவர் உலகக் கோப்பை தொடர் நடக்க இருப்பது குறித்து ரோகித் சர்மா அளித்த பேட்டியில் கூறியதாவது:-
"2007-ம் ஆண்டு 20 ஓவர் உலகக் கோப்பை போட்டி அறிமுகம் ஆனதில் இருந்து ஒவ்வொரு உலகக் கோப்பை தொடரிலும் பங்கேற்று இருக்கிறேன். இந்த முறை அந்த போட்டியை வீட்டில் இருந்தபடி பார்ப்பது புதுமையாக இருக்கும். உலகக் கோப்பை போட்டியை தவற விடும் போதுதான், அதன் யதார்த்தத்தை முழுமையாக புரிந்து கொள்வீர்கள். அப்போது தான், உலகக் கோப்பை பயணத்தில் நீங்கள் ஒரு பகுதியாக இல்லை என்பதை உணர்வீர்கள்.
இருப்பினும் மைதானத்தில் ஏதாவது ஒரு இடத்தில் நான் இருப்பேன். அது முன்பிருந்தது போல் இருக்காது. ஆனால் நிச்சயம் இது வித்தியாசமான ஒரு அனுபவமாக இருக்கும். எப்போதுமே உலகக் கோப்பை போட்டிக்கு முன்பாக சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டி இருக்கும். எனது கேப்டன்ஷிப்பில் பல முறை நடந்துள்ளது. எல்லோரையும் உங்களால் திருப்திப்படுத்த முடியாது. ஆனால் அந்த முடிவு (அணியில் நீக்கம்) ஏன் எடுக்கப்பட்டது என்பதை சம்பந்தப்பட்ட வீரர் அறிவது முக்கியம்."
இவ்வாறு ரோகித் சர்மா கூறினார்.






