மகளிர் பிரீமியர் லீக் - டெல்லியை வீழ்த்தி மும்பை அபார வெற்றி

டெல்லி அணி 145 ரன்கள் மட்டுமே எடுத்தது
நவிமும்பை,
5 அணிகள் இடையிலான மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டி நவிமும்பையில் நேற்று தொடங்கியது. இதில் இன்று நடைபெற்ற 3-வது லீக் ஆட்டத்தில் மும்பை - டெல்லி அணிகள் மோதின.
இந்த போட்டிக்கான டாஸை வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஜெமிமா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது.தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் ஹர்மன்பிரீத் கவுர் 74 ரன்களும், ஸ்கெவியார் பிரண்ட் 70 ரன்களும் எடுத்தனர்.
தொடர்ந்து 196 ரன்கள் இலக்குடன் விளையாடிய டெல்லி அணி, மும்பை அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறி கொடுத்தது. லிசெல் லீ(10), ஷபாலி வர்மா(8), லாரா வோல்வார்ட்(9), ஜெமிமா ரோட்ரிக்ஸ் (1), மரிசான் கேப்(10) என அனைவரும் ரன் அடிக்க தடுமாறி விக்கெட்டை இழந்தனர். பின்னர் களமிறங்கிய சின்னெல்லே ஹென்றி நிலைத்து நின்று ஆடி ஸ்கோரை உயர்த்தினார். 56(33) ரன் அடித்தபோது அவரும் தனது விக்கெட்டை இழந்தார்.
இறுதியில் 19 ஓவர்களில் 10 விக்கெட்டுகளையும் இழந்த டெல்லி அணி 145 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 50 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி அபார வெற்றி பெற்றது. மும்பை தரப்பில் அதிகபட்சமாக அமெலியா கெர் மற்றும் நிகோலா கேரி தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.






