மலேரியாவை ஒழிக்க உறுதி ஏற்போம்!


மலேரியாவை ஒழிக்க உறுதி ஏற்போம்!
x

மலேரியா பரவாமல் தடுக்க, பொதுமக்கள் தங்கள் வீடுகளையும் சுற்றுப்புறங்களையும் சுத்தமாக வைத்து கொள்ளவேண்டும்.

மலேரியா காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதனை கட்டுப்படுத்தவும் ஆண்டுதோறும் ஏப்ரல் 25-ந் தேதி, 'உலக மலேரியா தினம்' கடைப்பிடிக்கப்படுகிறது. மலேரியா நோய்த் தடுப்பு மற்றும் நோயை கட்டுப்படுத்தும் திட்டங்களுக்கு தொடர்ந்து முதலீடு செய்வது, அரசியல்ரீதியான உறுதிப்பாடு ஆகியவற்றை வலியுறுத்தும் நாளாக உலக மலேரியா தினம் உள்ளது.

மலேரியா என்றால் முதலில் நினைவுக்கு வருவது கொசுக்கள்தான். மலேரியா என்ற நோயினை கொசுக்கள் பரப்புகின்றன என்றாலும் பிளாஸ்மோடியம் என்ற கிருமியினால் தான் மலேரியா மக்களை தாக்குகிறது. மனித உடலில் அனபோலிஸ் என்கிற வகையை சேர்ந்த கொசுக்கள் ரத்தத்தை உறிஞ்சும்போது கொசுக்களின் எச்சில் சுரப்பிகளின் வழியாக பிளாஸ்மோடியம் உருவாக காரணமாக இருக்கும் ஸ்போரோசைட்களை மனித உடலில் செலுத்துகின்றன. மனித உடலில் இப்படி செலுத்தப்படும் ஸ்போரோசைட்கள் கல்லீரலில் தங்கி வளர்ச்சி பெற்று ரத்தத்திலும், சிவப்பு அணுக்களிலும் ஊடுருவுகின்றன. ஸ்போரோசைட் என்பது சுமார் நாற்பதாயிரம் முதல் அறுபதாயிரம் பிளாஸ்மோடியம்களாக வளர்ச்சி பெறுகிறது.

இந்த கிருமிகள் கல்லீரலிலும், ரத்த சிவப்பு அணுக்களிலும் இருக்கின்றபோது மனிதனுக்கு மலேரியா காய்ச்சலை உண்டு பண்ணுகின்றன. மனிதனை கொசுக்கள் கடிக்கும்போது கொசுக்கள் உறிஞ்சும் ரத்தத்தின் வழியாக நோய் பரப்பும் கிருமிகள் கொசுக்களின் உடலுக்கு செல்கின்றன. அடுத்த முறை வேறு மனிதனை கடிக்கும் போது அந்த மனிதனுக்கும் மலேரியாவை கொசுக்கள் பரப்புகின்றன. எனவே, மனித உடலிலும், கொசுக்கள் உடலிலும் வளர்ந்து பெருகும் பிளாஸ்மோடியம் கிருமிகளை பரவாமல் கட்டுப்படுத்தினால் மட்டுமே மலேரியா காய்ச்சலை ஒழிக்கமுடியும்.

இந்த அனபோலிஸ் கொசு வகைகள் சுத்தமான ஓடுகின்ற நீரில் இன விருத்தி செய்யக்கூடியவை. இதனால் தான் மலேரியா காய்ச்சல் மழை காலத்தில் அதிகமாக மக்களை தாக்குகின்றது. இந்த கொசு வகைகளை நாம் கட்டுபடுத்த வேண்டுமென்றால் ஓடுகின்ற நீரில் கொசுக்களை கொல்ல கூடிய டி.டி.டி. மற்றும் இதர பூச்சி கொல்லிகளை நீரில் கலக்கவேண்டும். இவ்வாறு கலக்கின்ற போது இந்த கொசுக்களை அழிப்பதுடன், கொசுக்கள் உற்பத்தியாவதையும் தடுக்க முடியும்.

அதேசமயம், பொதுமக்கள் கொசுக்கடியில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். கொசு உற்பத்தியை தடுக்கவும் தங்களால் முடிந்த பணிகளை செய்ய வேண்டும். தங்கள் வீடுகளையும் சுற்றுப்புறங்களையும் சுத்தமாக வைத்து கொண்டு, நீர் உள்ள இடங்களில் கொசுக்களை கொல்லும் பூச்சு கொல்லியை தெளிக்கவேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் மலேரியாவை அறவே ஒழிக்க முடியும்.

மலேரியா பாதிப்பு ஏற்பட்டால் அதிகப்படியான காய்ச்சல், தசை வலி, குளிர், குமட்டல் மற்றும் வாந்தி போன்ற அறிகுறிகள் தென்படும். இதய ஆரோக்கியம் போன்ற ஒருங்கிணைந்த அமைப்புகளையும் இந்நோய் பாதிக்கும் என்பதால் சில நேரங்களில் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும்.

மலேரியா ஒழிப்பு நடவடிக்கையை விரைவுபடுத்துவதற்கு, உலகளாவிய அளவில் அனைத்து மட்டங்களிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும் என உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தி உள்ளது. உலக மலேரியா தினமான இன்று மலேரியாவை அறவே ஒழித்து ஆரோக்கிய சமூதாயம் உருவாக உறுதியேற்போம்.

1 More update

Next Story