இன்று உலக கல்லீரல் அழற்சி தினம்

ஹெபடைடிஸ் வைரஸ் தாக்கத்தில் இருந்து மனித குலம் விடுபடுவதற்கு அதிக முன்னெடுப்புகள் மற்றும் மக்களிடையே விழிப்புணர்வு தேவை.
கல்லீரல் அழற்சி நோய்கள் தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 28-ம் தேதி உலக கல்லீரல் அழற்சி தினம் (உலக ஹெபடைடிஸ் தினம்) அனுசரிக்கப்படுகிறது.
கல்லீரல் பாதிப்புகளை உருவாக்கும் ஹெபடைடிஸ் பி வைரஸ் மற்றும் அதற்கான தடுப்பூசியை கண்டுபிடித்த டாக்டர் பருச் சாமுவேல் பிளம்பர்க்கை (Baruch Samuel Blumberg) நினைவுகூரும் விதமாக, அவர் பிறந்த நாளான ஜூலை 28-ம் தேதியில் உலக கல்லீரல் அழற்சி தினம் அனுசரிக்கப்படுகிறது.
மனித குலத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ள ஹெபடைடிஸ் வைரசின் தாக்கத்தால், உலகளவில் லட்சக்கணக்கான மக்கள் கடுமையான கல்லீரல் அழற்சி நோயினால் பாதிக்கப்பட்டு மரணமடைகின்றனர். இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2019-ம் ஆண்டு ஹெபடைடிஸ் வைரஸ் தொடர்பான நோய்களால் 11 லட்சம் மக்கள் (1.1 மில்லியன்) மரணம் அடைந்தனர். இந்த எண்ணிக்கை 2022-ம் ஆண்டு 13 லட்சமாக உயர்ந்திருப்பதாக உலக சுகாதார அமைப்பு கூறியிருக்கிறது.
எனவே, இந்த நோயின் பிடியில் இருந்து மனித குலம் விடுபடுவதற்கு அதிக முன்னெடுப்புகள் மற்றும் மக்களிடையே விழிப்புணர்வு தேவை. எனவே, ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு கருப்பொருளுடன் ஹெபடைடிஸ் குறித்த விழிப்புணர்வு மற்றும் சிகிச்சை முறைகள் எடுத்துரைக்கப்படுகின்றன.
அவ்வகையில் இன்று உலக கல்லீரல் அழற்சி தினம் அனுசரிக்கப்படுகிறது. கல்லீரல் அழற்சி நோய்களுக்கான அறிகுறிகள், தடுப்பு மற்றும் சிகிச்சை முறைகளைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உலகம் முழுவதும் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. வருங்காலத்தில் ஹெபடைடிஸ் வைரஸ் இல்லாத நிலையை ஏற்படுத்த வேண்டும் என்று உறுதி மொழி ஏற்கப்படுகிறது.
ஹெபடைடிஸ் வைரசானது கல்லீரலில் வீக்கத்தை ஏற்படுத்தும். இதன் காரணமாக நாளடைவில் கடுமையான கல்லீரல் நோய் மற்றும் கல்லீரல் புற்றுநோய் உருவாகலாம். இதன் காரணமாக மரணம் தவிர்க்க முடியாததாகிறது.
ஹெபடைடிஸ் வைரஸ் தாக்கத்தை ஆரம்ப காலத்திலேயே கண்டுபிடித்து உடனடி சிகிச்சை அளிப்பதன் மூலம் உயிரிழப்பை தவிர்க்க முடியும். ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு கருப்பொருளுடன் இதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அவ்வகையில் இந்த ஆண்டின் கருப்பொருள் "ஹெபடைடிஸ்: அதை முறியடிப்போம்" என்பதாகும். இது மருத்துவ சேவையை எளிமைப்படுத்தல் மற்றும் தேசிய சுகாதார அமைப்புகளுடன் மருத்துவ சேவைகளை ஒருங்கிணைப்பதன் மூலம் ஹெபடைடிஸ் தடுப்பு, நோயறிதல் மற்றும் சிகிச்சையில் உள்ள தடைகளை குறைக்க முடியும் என்பதை இந்த கருப்பொருள் உணர்த்துகிறது.
ஹெபடைடிஸ் ஒழிப்பு மற்றும் கல்லீரல் புற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு இடையூறாக இருக்கும் நிதி, சமூக மற்றும் அமைப்பு ரீதியான தடைகளை அகற்ற அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்த ஆண்டின் கருப்பொருள் வலியுறுத்துகிறது.
உலகளவில் மரணத்திற்கு காரணமான வைரஸ்களில் இரண்டாவது கொடிய தொற்றாக ஹெபடைடிஸ் உள்ளது என்றும், ஹெபடைடிஸ் பி மற்றும் சி வைரசானது ஒவ்வொரு நாளும் 3,500 உயிர்களை பலி வாங்குவதாகவும் உலக சுகாதார அமைப்பு கூறி உள்ளது.
மேலும், ஹெபடைடிஸை ஒரு பொது சுகாதார பிரச்சினையாக கருதி, தீவிர நடவடிக்கைகள் மூலம் 2030ஆம் ஆண்டுக்குள் ஹெபடைடிசை முடிவுக்கு கொண்டுவருவதற்கு நாம் இப்போதே செயல்பட வேண்டும் என்றும் உலக சுகாதார அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
ஹெபடைடிஸ் பி வைரஸ் பாதிப்பை பாதுகாப்பான மற்றும் பயனுள்ள தடுப்பூசி மூலம் தடுக்கலாம். இந்த தடுப்பூசியானது, குழந்தைகள் பிறக்கும்போதே செலுத்துவதற்கு பரிந்துரைக்கப்படுகிறது. பிறந்த சில மணி நேரங்களுக்குள் இந்த தடுப்பூசி செலுத்தப்படுகிறது. பின்னர் சில வாரங்களுக்குப் பிறகு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
தடுப்பூசி செலுத்தப்படாதவர்களுக்கும், வெவ்வேறு வயதுப் பிரிவினருக்கு தடுப்பூசி பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு ஆபத்து காரணிகள் இருந்தால் பரிந்துரைக்கப்படுகிறது.
இந்த தடுப்பூசி வைரசுக்கு எதிராக கிட்டத்தட்ட 100% பாதுகாப்பை வழங்குகிறது என்ற தகவலையும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.