இன்று சர்வதேச பூமி தினம்: இயற்கையை பாதுகாக்க நாம் செய்ய வேண்டியது என்ன?

இயற்கையின் சமநிலையை மேம்படுத்துவதற்காக ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
பூமியின் இயற்கை வளங்களை பாதுகாத்தல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஏப்ரல் 22-ம் தேதி உலகளவில் பூமி தினம் (புவி தினம்) கொண்டாடப்படுகிறது. அவ்வகையில், இந்த ஆண்டுக்கான பூமி தினம் இன்று (22.4.2025) உலகளாவிய நிகழ்வாக கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டின் கருப்பொருள், "நமது சக்தி, நமது கிரகம்" என்பதாகும். அதாவது, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டிற்கு மாறுவதற்கான கூட்டுப் பொறுப்பை இந்த கருப்பொருள் வலியுறுத்துகிறது. நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதில் மக்கள், சமூக அமைப்புகள் மற்றும் அரசாங்கங்கள் ஒன்றிணைந்து செயல்படும்படி வலியுறுத்தப்படுகிறது.
நாம் வாழும் பூமியின் சுற்றுச்சூழலை பாதிக்கும் செயல்பாடுகளில் பெரிய வணிக நிறுவனங்கள் மற்றும் அரசு நிறுவனங்களுக்கு முக்கிய பங்களிப்பு இருந்தாலும், ஒவ்வொரு தனிநபரின் செயல்பாடுகளும் சுற்றுச்சூழலை பாதிக்கின்றன.
எனவே, சுற்றுச்சூழலை மேம்படுத்தவும், எதிர்கால சந்ததியினர் வாழ்வதற்கு ஆரோக்கியமான இடமாக பூமியை மாற்றவும் இந்த நாளில் உறுதியேற்க வேண்டும். நமது கிரகத்தின் பாதுகாப்பு குறித்து பேசுவது மட்டுமல்லாமல் செயல்பட வேண்டிய நேரம் இது.
இயற்கையின் சமநிலையை மேம்படுத்துவதற்காக ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
என்ன செய்ய வேண்டும்?
எதிர்காலத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களை ஊக்குவிப்பது, கார்பனை வெளியேற்றும் வாகனங்களுக்கு பதிலாக மின்சார வாகனங்கள் அல்லது சைக்கிள் பயன்படுத்துவது, பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவது, பிளாஸ்டிக்கிற்கு பதிலாக துணிப்பைகளை உபயோகிப்பது, மரங்களை நடுவது, மறு சுழற்சி செய்த பொருட்களை பயன்படுத்துவது போன்ற செயல்பாடுகள் மூலம் இயற்கையை பாதுகாத்திட முடியும்.
உணவுப் பொருட்களை நாட்டின் ஒரு பகுதியில் இருந்து பிற பகுதிகளுக்கோ, அல்லது பிற நாடுகளுக்கோ விற்பனைக்காக எடுத்துச் செல்வதால் சுற்றுச்சூழலில் கார்பன் தாக்கம் ஏற்படுகிறது. எனவே, பருவகால உள்ளூர் உணவுகளை தேர்ந்தெடுத்து வாங்குவதன்மூலம் சுற்றுச்சூழல் பாதிப்பை குறைக்கலாம். இதன்மூலம் அந்தந்த பகுதி உணவுப் பொருட்கள் பிரெஷ்ஷாக, குறைந்த விலையில் கிடைக்கும்.
வீட்டின் ஜன்னல் ஓரத்தில் உள்ள ஸ்லாப்புகள், கொல்லைப்புற தோட்டம் மற்றும் காலியிடங்களில் மூலிகை செடிகள் உள்ளிட்ட தாவரங்களை வளர்ப்பதன் மூலம் காற்றின் தரத்தை மேம்படுத்தி வெப்பநிலையைக் குறைக்கலாம். இது பல்லுயிர் பெருக்கத்தை மேம்படுத்தவும் உதவும்.
செயற்கை நுண்ணறிவால் பாதிப்பு
சமீப காலமாக இணைய உலகில் ஆதிக்கம் செலுத்தி வரும் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பம் மனிதர்களின் வாழ்க்கை முறையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த தொடங்கி உள்ளது. இது மிகப்பெரிய சிக்கலுக்கும் எளிதில் தீர்வு காணும் என்பதில் சந்தேகம் இல்லை. குறிப்பாக, காலநிலை நெருக்கடியை சமாளிப்பதற்கு செயற்கை நுண்ணறிவு நமக்கு உதவும். இருப்பினும், ஏ.ஐ. மாடல்களின் ஆற்றல் தேவைகளை கருத்தில் கொள்ளும்போது, அவை காலநிலை பிரச்சினையின் ஒரு பகுதியாக உள்ளது என்பதையும் மறுக்கமுடியாது.
ஏ.ஐ. மாடல்களை உருவாக்கி பயன்படுத்துவதற்கு மிகவும் சக்திவாய்ந்த கணினி வளங்கள் தேவைப்படுகின்றன. அவற்றை இயக்குவதற்கு அதிக சக்தி தேவைப்படுகிறது. இது அதிக ஆற்றல் நுகர்வு மற்றும் உமிழ்வு ஆகியவற்றுக்கு வழிவகுக்கிறது. ஒரு பெரிய ஏ.ஐ. மொழி மாடலானது, ஐந்து கார்கள் அவற்றின் முழு வாழ்நாளிலும் வெளியிடும் அளவுக்கு கார்பன் டை ஆக்சைடை வெளியிடுவதாக கண்டறியப்பட்டுள்ளது.
எனவே, ஏ.ஐ. விஷயத்திலும் விழிப்புணர்வாக இருக்க வேண்டியது அவசியம். ஏ.ஐ. கருவிகளைப் பயன்படுத்துவதில் ஆராய்ந்து முடிவுகளை எடுக்கலாம். கார்பன் உமிழ்வைக் குறைக்கும் நோக்கத்துடன் செயல்படும் நிறுவனங்களையும், சுற்றுச்சுழல் பாதுகாப்பு திட்டங்களுக்கு நிதியளிக்கும் நிறுவனங்களையும் ஆதரிக்கலாம்.