90 ஆண்டுகளுக்கு முன்புவரை கூவம் நதியும் ஜீவ நதிதான்!


90 ஆண்டுகளுக்கு முன்புவரை கூவம் நதியும் ஜீவ நதிதான்!
x
தினத்தந்தி 22 Aug 2025 12:00 AM IST (Updated: 22 Aug 2025 12:00 AM IST)
t-max-icont-min-icon

1935-ம் ஆண்டு வரை கூவம் நதியில் சுத்தமான நீரே பாய்ந்து ஓடியிருக்கிறது.

சென்னை

சென்னையில் இன்றைக்கு கருப்பு நிறத்தில் கழிவுநீர் கால்வாயாக ஓடிக் கொண்டிருக்கும் கூவம் நதியின் பெயரை கேட்டாலே, அனைவரும் மூக்கை பொத்திக் கொள்கிறோம். ஆனால், ஒரு காலத்தில் மதராஸ் பட்டண மக்களுக்கு வாழ்வு அளிக்கும் ஜீவ நதியாக இருந்திருக்கிறது. ஆங்கிலேயர்களும் கூவம் நதியின் அழகில் மயங்கியே, வங்கக் கடலுடன் சங்கமிக்கும் இடத்தில் புனித ஜார்ஜ் கோட்டையை கட்டினார்கள்.

கோவில்களுக்கு சென்ற பக்தர்கள் கூவம் நதியில் நீராடிய பிறகே, தங்களது வேண்டுதலை நிறைவேற்றி இருக்கிறார்கள். படகு போக்குவரத்தும் நடந்திருக்கிறது. ரோமாபுரி மன்னர்கள் காலத்தில் கூவம் ஆற்றின் வழியே வர்த்தகமே நடந்திருக்கிறது. அதை நிரூபிக்கும் வகையில், ரோம் தேசத்தின் அழகு ஜாடிகள், நாணயங்கள் கூவம் ஆற்றின் கரையோரங்களில் பிற்காலத்தில் கண்டெடுக்கப்பட்டன.

இப்படி, 1935-ம் ஆண்டு வரை கூவம் நதியில் சுத்தமான நீரே பாய்ந்து ஓடியிருக்கிறது. அமைந்தகரை உள்பட ஒரு சில பகுதிகளில் சலவை தொழிலாளர்கள் துணி துவைத்து உலர்த்தி இருக்கின்றனர். அதன்பிறகு, திருவல்லிக்கேணி பகுதியில் வந்த சாயத் தொழிற்சாலைகள், கரையோரம் மக்கள் பெருக்கத்தின் காரணமாக கூவம் நதி சீர்கெடத் தொடங்கியது. படகு போக்குவரத்தும் நிறுத்தப்பட்டு, கடைசியில் கழிவுநீர் கால்வாயாகவே மாற்றப்பட்டது.

இந்த நிலையில், 1967-ல் அண்ணா ஆட்சி பொறுப்பேற்றதும் கூவம் நதியை காப்பாற்ற திட்டம் வகுக்கப்பட்டது. அவர் மறைவுக்கு பிறகு, கருணாநிதி முதல்-அமைச்சர் ஆனதும் அந்த திட்டம் விரைவுபடுத்தப்பட்டது. 1975-ம் ஆண்டு கூவம் நதியில் மீண்டும் படகு போக்குவரத்து தொடங்கப்பட்டது. சீருடை அணிந்த படகோட்டிகள் துடுப்பு போட்டனர். ஸ்பெர்டாங்க் ரோடு, கிரீம்ஸ் ரோடு, காயிதே மில்லத் கல்லூரி, கெயிட்டி தியேட்டர் ஆகிய இடங்களில் படகுத் துறைகள் அமைக்கப்பட்டன. அதற்கு, குமணன் துறை, குகன் துறை, பாரி துறை என்றெல்லாம் பெயரிடப்பட்டன. ஆனால், கூவம் நதியில் இருந்து எழுந்த துர்நாற்றம், படகில் செல்பவர்களை மூக்கைப் பிடிக்க வைத்தது. இதனால், யாரும் படகு பயணத்தை விரும்பவில்லை. நாளடைவில், அந்தத் திட்டம் கைவிடப்பட்டது.

90 ஆண்டுகள் கடந்த நிலையில், இப்போது கூவம் நதி கழிவுநீர் கால்வாயாக, சென்னையின் கருப்பு அடையாளமாக மாறிவிட்டது. அடையாறு, பக்கிங்காம் கால்வாய், ஓட்டேரி நல்லா கால்வாய் ஆகியவற்றின் பரிதாப நிலையும் அதுவே.

1 More update

Next Story