113 ஆண்டுகளுக்கு முன்பு டைட்டானிக் கப்பல் மூழ்கிய தினம் இன்று...

பிரமாண்ட பனிப் பாறையின் மீது டைட்டானிக் கப்பல் மோதி கடலில் மூழ்கியது.
டைட்டானிக்.. அறிவியல் - தொழில்நுட்பத்தில் பெரிய அளவில் வளர்ச்சி காணாத காலக்கட்டத்திலேயே உருவாக்கப்பட்ட பிரமாண்ட சொகுசு சுற்றுலா கப்பல். ஆனால், யார் கண்பட்டதோ தெரியவில்லை, துரதிஷ்டவசமாக தனது முதல் பயணத்தின்போதே, அதாவது 1912-ம் ஆண்டு ஏப்ரல் 15-ந் தேதி (இதே நாள்) பனிப்பாறையில் மோதிய விபத்தில் உருகுலைந்து மூழ்கியது. இந்த விபத்தில், கப்பலில் பயணம் செய்த 1,500-க்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர்.
அந்த காலத்தில் தகவல் தொழில்நுட்பம் பெரிய அளவில் இல்லாததால், இவ்வளவு பெரிய கப்பல் நீரில் மூழ்கியது உலக நாடுகளுக்கு தெரியவே பல நாட்கள் ஆனது. அப்போது அதை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவும் இல்லை. ஆனால், 1997-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 19-ந் தேதி ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளிவந்த 'டைட்டானிக்' படம் உலக அளவில் பல்வேறு மொழிகளில் வெளியாகி மக்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்தது. 200 மில்லியன் அமெரிக்கா டாலர் செலவில் எடுக்கப்பட்ட இந்தப் படம் 1.8 பில்லியன் அமெரிக்க டாலர் வருவாய் ஈட்டியது. 11 விருதுகளையும் அள்ளியது.
டைட்டானிக் கப்பல் மூழ்கி இன்றுடன் 113 ஆண்டுகள் ஆகிறது. ஆனாலும், அந்த கப்பல் விட்டுச் சென்ற வடுக்கள் இன்னும் கடலுக்கு அடியில் இரும்புக் கூடாக நீர் அருங்காட்சியகமாக காட்சி அளித்துக் கொண்டிருக்கிறது.
113 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் நடந்த நிகழ்வு பற்றிய விவரம் பின்வருமாறு:-
இங்கிலாந்து நாட்டின் லிவர்பூல் நகரை சேர்ந்த 'ஒயிட் ஸ்டார் லைன்' என்ற நிறுவனம் பிரமாண்ட சொகுசு கப்பலான டைட்டானிக்கை உருவாக்க திட்டமிட்டது. அயர்லாந்தின் பெல்பாஸ்ட் நகரில் உள்ள ஹார்லேண்ட் அண்ட் உல்ப் கப்பல் கட்டும் தளத்தில் 'டைட்டானிக்' கப்பல் உருவாக்கும் பணி 1909-ம் ஆண்டு தொடங்கப்பட்டு 1911-ம் ஆண்டு நிறைவடைந்தது. உலகில் எங்குமே இல்லாத வகையில் முதல் பிரமாண்ட சொகுசு கப்பல் என்பதால், கண்டவர்களை ஆச்சரியத்தில் புருவம் உயர்த்தி பார்க்க வைத்தது. அதனால், இந்த பிரமாண்ட கப்பலில் சுற்றுலா செல்ல பலர் முண்டியடித்து முன்பதிவு செய்தனர்.
டைட்டானிக் கப்பல் தனது முதல் பயணத்தை இங்கிலாந்தின் சவுத்ஆம்டன் துறைமுகத்தில் இருந்து 1912-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10-ந் தேதி தொடங்கியது. பல நாடுகளை சேர்ந்த கோடீஸ்வரர்கள், நடுத்தர மக்கள், கப்பல் ஊழியர்கள், தொழிலாளர்கள் என மொத்தம் 2,223 பேர் கப்பலில் பயணம் மேற்கொண்டனர். கப்பல் புறப்பட்ட இடமான சவுத் ஆம்டனில் இருந்து 922 பயணிகள்தான் முதலில் சென்றனர். இடையில் செர்பர்க் மற்றும் குயின்ஸ் டவுனில் மற்றவர்கள் ஏறிக்கொண்டனர். அதன்பிறகு, தெற்கு அயர்லாந்தின் கார்க் துறைமுகத்தில் இருந்து அட்லான்டிக் கடலில் தனது முதல் பயணத்தை டைட்டானிக் தொடங்கியது.
அட்லான்டிக் கடலில் அமெரிக்காவுக்கு கிழக்கே நியூபவுண்ட்லேண்ட் என்ற தீவு உள்ளது. இந்த தீவுக்கு தெற்கே சுமார் 600 கி.மீ. தொலைவில் ஏப்ரல் 14-ந் தேதி இரவு டைட்டானிக் ஒளிவெள்ளத்தில் கம்பீரமாக வந்துகொண்டிருந்தது. எதிர்பாராதவிதமாக, கடலுக்கு அடியில் உள்ள நீரோட்டத்தின் காரணமாக நகர்ந்து வந்த பிரமாண்ட பனிப் பாறையின் மீது இரவு 11.40 மணியளவில் கப்பல் மோதியது.
மோதிய இடத்தில் உடைப்பு ஏற்பட்டு, கடல் நீர் உள்ளே புகத் தொடங்கியது. படிப்படியாக ஒவ்வொரு அறையிலும் நீர் புகுந்தது. என்ன நடக்கிறது என்று பலருக்கு தெரியவில்லை. தெரிந்தவர்களுக்கு அடுத்து என்ன செய்வதென்று புரியவில்லை. ஒரு கட்டத்தில் கப்பல் இரண்டாக பிளந்து வேகமாக மூழ்கத் தொடங்கியது. தப்பிப்பதற்காக பலர் கடலுக்குள் குதித்தனர். அதிகாலை 2.20 மணிக்கு கப்பல் முழுவதுமாக நீரில் மூழ்கியது.
கப்பலில் இருந்த மீட்பு படகுகள் உதவியுடன் 709 பேரை மட்டுமே மீட்க முடிந்தது. மற்ற 1,514 பேரும் பரிதாபமாக நீரில் மூழ்கி இறந்தனர். வரலாற்றில் ஒரு அழிக்க முடியாத சோகத்தை பதிவு செய்ய வேண்டியதாகிவிட்டது. உலகையே பிரமிக்கவைத்த பிரமாண்ட சொகுசு கப்பலின் சகாப்தம் முதல் பயணத்திலேயே முடிவுக்கு வந்துவிட்டது. பயணத்தை தொடங்கிய 5-வது நாளிலேயே அட்லான்டிக் மகா சமுத்திரத்தில் ஜல சமாதி அடைந்துவிட்டது.
அதன் 113-வது ஆண்டு நினைவு தினம் இன்று (செவ்வாய்கிழமை) அனுசரிக்கப்படுகிறது. கப்பல் புறப்பட்ட சவுத்ஆம்டன், வழியில் இருந்த செர்பர்க், குயின்ஸ்டவுன், செல்லவிருந்த நியூயார்க் நகரம் மட்டுமின்றி விபத்து சம்பவம் நடந்த நடுக்கடலிலும் இன்று அஞ்சலி நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
பவுண்ட்லேண்ட் தீவில் இருந்து ஏராளமானோர் இன்று படகுகளில் விபத்து நடந்த இடத்துக்கு சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்துகிறார்கள். அயர்லாந்து, கனடாவிலும் நினைவு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அமெரிக்கா, இங்கிலாந்தின் முக்கிய நகரங்களில் நடக்கும் அஞ்சலி ஊர்வலங்களில் மெழுகுவர்த்தி ஏந்தி ஏராளமானோர் பங்கேற்பார்கள். டைட்டானிக் கப்பலில் சென்று உயிரிழந்தவர்களின் வாரிசுகளும் இந்த நிகழ்வுகளில் கலந்துகொண்டு, இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவார்கள்.