சண்டே ஸ்பெஷல் : ருசியான செட்டிநாடு சிக்கன் செய்வது எப்படி..?


சண்டே ஸ்பெஷல் : ருசியான செட்டிநாடு சிக்கன் செய்வது எப்படி..?
x

தீபாவளி பண்டிகையை ஒட்டி ருசியான செட்டிநாடு சிக்கன் செய்வது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.

சண்டே ஸ்பெஷல்

தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்பட இருப்பதால், இந்த வாரம் பேச்சுலர்ஸ் சமையல் டிப்ஸ் பகுதியில் அசைவ உணவு ஒன்று எப்படி செய்வது என்று பார்க்கப்போகிறோம். தீபாவளிக்கு நீங்களும் முயற்சிக்களாமே.

செட்டிநாடு சிக்கன்

தேவையான பொருட்கள்

சிக்கன் - ½ கிலோ

மிளகு - 2 டீஸ்பூன்

சீரகம் - 2 டீஸ்பூன்

பெருஞ்சீரகம் - 2 டீஸ்பூன்

மல்லி - 4 டீஸ்பூன்

வெந்தயம் - 1 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - ½ டீஸ்பூன்

பட்டை - 5

ஏலக்காய் - 4

இலவங்கம் - 4

அன்னாச்சிப்பூ - 3

கடற்பாசி - 5

காய்ந்த மிளகாய் - 6

இஞ்சி, பூண்டு விழுது - 2 டீஸ்பூன்

தக்காளி - ¼ கிலோ

பெரிய வெங்காயம் - ¼ கிலோ

நல்லெண்ணெய் - 1 குழிக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

கறிவேப்பிலை - தாளிக்க

செய்முறை

வாணலியில் கடாயை வைத்து, அதில் மல்லி, காய்ந்த மிளகாய், கடற்பாசி, பட்டை, இலவங்கம், அன்னாச்சிப்பூ, ஏலக்காய், மிளகு, சீரகம், பெருஞ்சீரகம், கறிவேப்பிலை ஆகியவற்றை எண்ணெய் இல்லாமல் நன்கு வறுத்து, பிறகு ஆறவைத்து பொடியாக்கிக்கொள்ளவும்.

வாணலியில் மற்றொரு பாத்திரத்தை வைத்து ஒரு குழிக்கரண்டி நல்லெண்ணெய் விட்டு, பட்டை, இலவங்கம், ஏலக்காய் சேர்த்து தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயத்தை பொன்நிறமாக மாறும் வரை வதக்கிக்கொள்ளவும்.

பிறகு இஞ்சி, பூண்டு அரவையைச் சேர்த்து பச்சை வாசனை போகும்படி வதக்கி, பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து, நன்கு வதக்கவும். நன்கு கழுவி சுத்தப்படுத்திய சிக்கனை மஞ்சள் தூள் சேர்த்து வதக்கிய பிறகு தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து நன்கு வேகவைக்கவும்.

சிக்கன் முக்கால்வாசி வெந்த பிறகு, பொடித்து வைத்துள்ள மசாலாவில் 4 டீஸ்பூன் சேர்த்து, பச்சை வாசனை போகக் கிளறி, நன்கு வெந்தவுடன் இறக்கவும். சுவையான செட்டிநாடு சிக்கன் ரெடி.





1 More update

Next Story