சண்டே ஸ்பெஷல்: ஒரே செய்முறையில் 7 வகையான பொரியல்கள் செய்வது எப்படி..?

இந்த வாரம் பேச்சுலர்ஸ் சமையல் டிப்ஸ் பகுதியில் ஒரே செய்முறையில் 7 வகையான பொரியல்கள் எப்படி செய்வது? என்பதை பற்றி பார்க்கப்போகிறோம்.
வாரத்திற்கு 7 நாட்கள். ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வகையான பொரியல் செய்து அசத்தலாம்.
கேரட் பொரியல்
தேவையான பொருட்கள்
கேரட் - ½ கிலோ
பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 3
தேங்காய் - 2 துண்டு அளவு
சீரகப்பொடி - 2 டீஸ்பூன்
மஞ்சள் பொடி - 1 டீஸ்பூன்
கடலை எண்ணெய் - ஒரு குழிக்கரண்டி அளவு
உப்பு - தேவையான அளவு
கடுகு, உளுந்தம் பருப்பு, கருவேப்பிலை - தாளிக்க
செய்முறை
கேரட்டை துருவிக்கொள்ளவும் (பொடிப்பொடியாக வெட்டவும் செய்யலாம்). பெரிய வெங்காயத்தை சிறிதாக நறுக்கிக்கொள்ளவும். பச்சை மிளகாயையும் சிறிது சிறிதாக வெட்டிக்கொள்ளவும். தேங்காயை துருவி வைத்துக்கொள்ளவும்.
முதலில் அடுப்பில் வாணலியை வைத்து, அதில் கடலை எண்ணெயை ஊற்றி தாளிக்க தேவையான கடுகு, உளுந்தம் பருப்பு, கருவேப்பிலை போட்டு, வெட்டி வைத்த பெரிய வெங்காயத்தையும் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் பொன் நிறமாக வந்ததும், அதனுடன் கேரட் துருவலை சேர்த்து நன்கு கிண்டிக் கொண்டே இருக்கவும். வெட்டி வைத்த பச்சை மிளகாயையும் சேர்க்கவும். தேவையான அளவு உப்பை சேர்க்கவும்.
அடுப்பில் தீயை மீடியமாக வைக்கவும். சட்டியில் அடி பிடித்துவிடக்கூடாது. அதற்கு ஏற்ற வகையில் கேரட்டை கிளரவும். அதனுடன் சீரகப்பொடி, மஞ்சள் பொடியை சேர்க்கவும். துருவிய கேரட் என்பதால் 5 நிமிடங்களில் வதங்கிவிடும். கடைசியாக தேங்காய் துருவலை சேர்த்து கிண்டி, இறக்கவும். சுவையான கேரட் பொரியல் ரெடி.
இதே பக்குவத்தில் பீட்ரூட், பீன்ஸ், அவரைக்காய், உருளைக்கிழங்கு, முட்டைக்கோஸ், சீனி அவரைக்காய் (கொத்தவரை) பொரியல் ஆகியவற்றையும் செய்யலாம். பீட்ரூட் பொரியலுக்கு பீட்ரூட்டை துருவிக்கொள்ளவும். அல்லது சிறிது சிறிதாக வெட்டிக்கொள்ளவும் செய்யலாம்.
பீன்ஸ், அவரைக்காய், உருளைக்கிழங்கு, முட்டைக்கோஸ், சீனி அவரைக்காய் ஆகியவற்றை சிறிது சிறிதாக நறுக்கிக்கொள்ளவும். மேலே செய்முறையில் கூறப்பட்டபடி, கேரட் துருவலுக்கு பதில் இந்தக் காய்கறிகளை சேர்த்து அதே பக்குவத்தில் செய்தால் 7 வகையான பொரியல் தயார். வாரத்தில் 7 நாட்களும் ஒவ்வொன்றாக செய்து சாப்பிடலாம்.






