கேரளாவின் பாரம்பரிய சிறப்புமிக்க ஓணம் பண்டிகை

மகாபலி மன்னரின் வருகையை கொண்டாடும் பொருட்டு, ஒவ்வொரு வீடுகளின் வாசலிலும் வண்ண மலர்களை கொண்டு 'அத்தப்பூ' எனப்படும் பூக்கோலம் இடப்படுகிறது.
கேரளாவில் கொண்டாடப்படும் பாரம்பரியமிக்க பாடின்றி அனைத்து மக்களாலும் கொண்டாடப்படும் இந்த பண்டிகை, கேரளா மட்டுமின்றி கேரளாவை ஒட்டியுள்ள தமிழக பகுதிகளிலும் சிறப்பாக நடைபெறும். ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் திருவோண நட்சத்திரத்தில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. கேரள மன்னன் மகாபலி சக்கரவர்த்தியின் நினைவாக ஓணம் பண்டிகை நடத்தப்படுகிறது. இந்த பண்டிகையை கேரளாவின் அறுவடை திருவிழா என்றும் அழைக்கிறார்கள்.
அசுர குலத்தில் பிறந்த பிரகலாதனின் வம்சத்தை சேர்ந்தவர்தான் மகாபலி சக்கரவர்த்தி. கேரளாவில் ஆட்சி செய்த மகாபலி மன்னன், நாட்டை சிறப்பாக வழிநடத்தி வந்தார். அசுர குலத்தில் பிறந்திருத்தாலும் மக்கள் மீது அளவுகடந்த அன்பும், மகாவிஷ்ணு மீது அதீத பக்தியும் வைத்திருந்தார். இருப்பினும் அசுர குலத்தின் வழக்கமாக, தேவர்களை ஒடுக்க எண்ணினார், மகாபலி மன்னன்.
மகாபலியின் குருவாக இருந்தவர் சுக்ராச்சாரியார். ஒரு முறை குருவின் ஆசிபெற்று மிகப்பெரிய யாகம் ஒன்றை நடத்தினார் மன்னன். அந்த யாகம் நிறைவு அடைந்தால், இந்திரன் பதவிக்கு ஆபத்து வரும் என்பதால் மகாவிஷ்ணுவிடம் தேவர்கள் முறையிட்டனர். இதையடுத்து விஷ்ணு, வாமன (குள்ள வடிவ) அவதாரம் எடுத்து யாகம் நடந்த இடத்துக்கு சென்றார். யாகம் முடியும்போது யார் என்ன தானம் கேட்டாலும் மறுக்காமல் கொடுக்க வேண்டும் என்பது வழக்கம்.
மகாபலி மன்னன் நாட்டு மக்களுக்கு கேட்கும் தானத்தை வழங்கி கொண்டிருந்தார். அப்போது வாமனராக வந்த விஷ்ணு, மன்னன் முன் வந்தார். மன்னன் அவரிடம் “என்ன தானம் வேண்டும்?" என்று கேட்டார். வாமனராக குள்ள உருவத்தில் வந்திருப்பது மகாவிஷ்ணு என்பதை அறிந்து கொண்ட சுக்ராச்சாரியார் மகாபலியை தடுத்தார்.
ஆனால் மன்னன், "யாகம் முடியும் தருவாயில் உள்ளது. எனவே தானம் கொடுப்பதை நிறுத்த வேண்டாம்" என்று சுக்ராச்சாரியார் சொன்னதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. வாமனரும், “அரசே எனக்கு மூன்று அடி மண் கொடுத்தால் போதும்” என்று கூறினார். வாமனரின் குள்ளமான உருவத்தை பார்த்து, “தங்களுக்கு மூன்று அடி மண் போதுமா?" என்று நகைப்புடன் கேட்டார், மகாபலி மன்னன்.
அந்த காலத்தில் தானம் கொடுப்பவர், தானம் பெறுபவர்களுக்கு தனது கையால் நீரை தாரை வார்த்து கொடுப்பது வழக்கத்தில் இருந்தது. அதன்படி வாமனர் கேட்ட மூன்று அடி நிலத்தை தாரைவார்த்து கொடுப்பதற்கு கமண்டலத்தில் உள்ள நீரை மகாபலி கொடுக்க முயன்றார். அப்போது சுக்ராச்சாரியார், தனது கண்ணை ஒரு வண்டாக மாற்றி கமண்டலத்தின் வாய் பகுதியை அடைத்தார். இதனால் கமண்டலத்தில் இருந்து நீர் வெளியே வரவில்லை. இதை அறிந்த வாமனர், தன்னிடம் இருந்த தர்ப்பை புல்லை எடுத்து கமண்டலத்தில் இருந்த வண்டை குத்தினார். இதனால் சுக்ராச்சாரியாரின் ஒரு கண் குருடானது.
பின்பு மகாபலி கமண்டலத்தில் இருந்த நீரைக் கொண்டு வாமனர் கேட்ட மூன்று அடி நிலத்தை தாரை வார்த்துக் கொடுத்தார். உடனே குள்ளமாக இருந்த வாமனர் தன்னுடைய உருவத்தை பெரிதாக்கி பூமிக்கும் வானுக்குமாக உயர்ந்து நின்றார். பின்னர் தன்னுடைய ஒரு கால் அடியால் பூமியையும், இரண்டாம் அடியால் வானத்தையும் அளந்தார். மூன்றாம் அடியை வைக்க இடம் இல்லை. அதனால் மகாபலி மன்னரிடம், “மகாபலியே, நான் கேட்ட மூன்றாவது அடியை எங்கே வைப்பது” என கேட்டார். உடனே மகாபலி மன்னர், “என்னுடைய தலையில் வையுங்கள்” என்றார்.
அதன்படி வாமனர் தனது மூன்றாவது அடியை மகாபலி மன்னனின் தலையில் வைத்து, அவரை பாதாள உலகிற்கு தள்ளினார். அதேசமயம் அகந்தை அகன்ற மகாபலி, விஷ்ணுவிடம் “என்னுடைய மக்களை காண ஆண்டுக்கு ஒரு முறை பூமிக்கு வர அனுமதி வழங்க வேண்டும்” என்று வேண்டினார். அதன்படி விஷ்ணுவும் வரமளிக்க, ஆண்டுக்கு ஒரு முறை திருவோண நாள் அன்று மகாபலி மன்னன் பூமிக்கு வருவதாக கருதப்படுகிறது. அவர் வருகையை வரவேற்கும் வகையில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவதாக ஐதீகம்.
ஓணம் பண்டிகை ஆவணி மாதம் அஸ்தம் நட்சத்திரத்தில் தொடங்கி திருவோணம் நட்சத்திரம் வரை 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. அந்த பத்து நாட்களும் ஒவ்வொரு வீடும் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு, கோலங்கள், புத்தாடைகள், விளையாட்டுகள் என மகிழ்ச்சியுடன் காணப்படும்.
ஓண சத்யா
ஓணம் பண்டிகையின் போது கேரளாவில் தயார் செய்யப்படும் விருந்தே 'ஓண சத்யா” ஆகும். அறுசுவைகளில் கசப்பை தவிர மற்ற சுவைகளில் 64 வகையான 'ஓண சத்யா' தயார் செய்யப்படுகிறது. பாரம்பரிய முறையை பின்பற்றியே இந்த உணவுகள் தயாரிக்கப்படுகின்றன. அரிசி சாதம், பருப்பு, நெய், சாம்பார், ரசம், மோர், அவியல், பச்சடி, அப்பளம், சீடை, எரிசேரி, ஊறுகாய் போன்ற உணவுகள் தயாரிக்கப்பட்டு கடவுளுக்கு படைக்கப்படும். பின்பு மற்றவர்களுக்கு பரிமாறப்படுகிறது. தரையில் அமர்ந்து, தலைவாழையில் உணவு இட்டு சாப்பிடுவதே முறையாகும்.
அத்தப்பூ கோலம்
மகாபலி மன்னரின் வருகையை கொண்டாடும் பொருட்டு, ஒவ்வொரு வீடுகளின் வாசலிலும் வண்ண மலர்களை கொண்டு 'அத்தப்பூ' எனப்படும் பூக்கோலம் இடப்படுகிறது. கேரளாவில் ஆவணி மாதம் என்பது பூக்கள் பூத்துக் குலுங்கும் காலமாகும். 10 நாட்கள் கொண்டாடப்படும் இந்த ஓணம் பண்டிகையில் ஒவ்வொரு நாளும் ஒரேவகையான பூக்களை கொண்டு கோலம் இடப்படுகிறது. 10-வது நாளில் பத்து வகையான மலர்களை கொண்டு கோலம் இடப்பட்டு கண்களுக்கு விருந்து படைக்கிறார்கள்.
ஓணப் புடவை
ஓணம் பண்டிகையின் பத்து நாளும் அதிகாலையில் எழுந்து புத்தம் புதிய ஆடைகளை அணிந்து மகிழ்வார்கள். அதிலும் கேரள பெண்கள் அணியும் 'ஓணப்புடவை' மிகவும் பிரபலமான பாரம்பரிய உடையாகும். சந்தன வெண்ணிற ஆடையின் ஓரத்தில் தங்க நிற அலங்காரத்துடன் ஒணப்புடவை நேர்த்தியாக இருக்கும். இதை 'கசவு புடவை' என்றும் அழைப்பார்கள். இந்த புடவையில் அதிகமாக இருக்கும் வெண்மை நிறம் அமைதி, தூய்மை,கேரளாவின் கலாசார ஒற்றுமையையும், தங்க நிறம் செல்வத்தையும் குறிப்பதாக சொல்லப்படுகிறது. ஆண்களும் கூட தங்க நிற ஓரம் கொண்ட வேஷ்டியை அணிந்து மகிழ்வார்கள்.
கொண்டாட்டம்
கேரளாவில் ஓணம் பண்டிகையின் போது பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. அதில் மிகவும் புகழ் பெற்றது படகு போட்டியாகும். இந்த படகு போட்டி குழுவாக நடைபெறுகிறது. மேலும் யானைகளுக்கு அலங்காரம் செய்து வீதிகளில் ஊர்வலமாக அழைத்து வருவார்கள். ஓணத் திருவிழாவில் 'புலிக்களி' எனப்படும் நடனம் நிகழ்த்தப்படுகிறது. இதில் சிவப்பு, மஞ்சள், கருப்பு ஆகிய வண்ணங்களால் புலி வேடமிட்டு நடனம் ஆடுவார்கள். இதுதவிர ஓண ஊஞ்சல், கயிறு இழுத்தல், களரி போன்ற பல விளையாட்டுகள் நடத்தப்படுகிறது.
ஓணம் பண்டிகையின்போது, கேரளாவில் திரும்பும் திசையெல்லாம் இறை வழிபாடு, ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம், என திருவிழாக்கோலம் பூண்டிருக்கும். இந்த ஆண்டு 5-9-2025 அன்று ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.