அன்புக்கு இலக்கணமான அன்னையை போற்றுவோம்!


அன்புக்கு இலக்கணமான அன்னையை போற்றுவோம்!
x

குட்டி தேவதை, சகோதரி, மனைவி, தாய், பாட்டி என்று எத்தனையோ வாழ்க்கை வடிவங்களை பெண்கள் கொண்டிருந்தாலும், தாய் என்ற அன்னையின் வடிவமே மகத்துவமானது.

இன்று சர்வதேச அன்னையர் தினம். 1914 முதல் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 2-வது ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டு வருகிறது. வருடத்தின் 365 நாட்களும் ஏதோ ஒரு முக்கிய நாளை நாம் கொண்டாடிக் கொண்டுதான் இருக்கின்றோம், அல்லது நினைவு கூறுகிறோம்.

ஆனால், கொண்டாட்டங்களில் சிகரம் தொடுவது அன்புக்கு இலக்கணமான அன்னையர் தினம் தான். 'அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை..' என்ற அப்போதைய பாடல் முதல், 'ஆசப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம்.. அம்மாவ வாங்க முடியுமா?' என்ற தற்போதைய பாடல் வரை அன்னையின் அன்பைச் சொல்லாத சினிமா பாடல்களே இல்லை. இந்திய சினிமாவில், அன்னையரை புகழ்பாடி அதிக பாடல்கள் வெளிவருவது தமிழ் படங்களில்தான் என்ற புள்ளி விவரம் நமக்கெல்லாம் கூடுதல் பெருமையளிக்கிறது.

குட்டி தேவதை, சகோதரி, மனைவி, தாய், பாட்டி என்று எத்தனையோ வாழ்க்கை வடிவங்களை பெண்கள் கொண்டிருந்தாலும், தாய் என்ற அன்னையின் வடிவமே மகத்துவமானது. ஒவ்வொரு குடும்பத்தின் மையமும் அன்னையே.

ஏழ்மை நிலையில் உள்ள பல குடும்பங்களில் மனதை கணக்கச் செய்யும் இந்த காட்சி நடந்திருக்கும். குறைந்த உணவுப் பொருட்களைக் கொண்டு கொஞ்சமே சாப்பாடு தயார் செய்திருந்தாலும், அதை கணவன், பிள்ளைகள் வாயிறாற சாப்பிட பரிமாறிவிட்டு, மீதம் இருக்கும் குறைந்த உணவையே சாப்பிட்டு மனம் நிறைந்திருப்பாள், தாய்.

ஆனால், இன்றைக்கு பரபரப்பாகிப் போன இயந்திர வாழ்க்கையில், தாயின் அன்பை நினைத்து பார்க்கக்கூட யாருக்கும் நேரம் இருப்பது இல்லை. ரெக்கை கட்டிக்கொண்டு பறந்து கொண்டிருக்கிறோம். இப்போதைய நவீன தாய், கணவன், பிள்ளைகளை கவனித்துக்கொள்வதுடன் குடும்ப பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக வேலைக்கும் செல்லத் தொடங்கியிருக்கிறார்கள். ஒற்றை மாட்டு வண்டியாக குடும்ப பாரத்தை கணவன் சுமந்த காலம்போய், இரட்டை மாட்டு வண்டியாக பெண்களும் கணவனுக்கு உறுதுணையாக கைகொடுக்கிறார்கள்.

மற்றொரு பக்கம், பல குடும்பங்களில் தாய்-தந்தை ஓய்வு பெற்று வீட்டில் ஓய்வெடுப்பதை காணலாம். பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் பிள்ளைகளிடம் மனம்விட்டு பேசக் கூட முடியாமல் தவியாய் தவித்துக்கொண்டு இருக்கிறார்கள். சில வீடுகளில் இது ஒரு படி மேலே போய், கவனிக்க வழியில்லாமல் முதியோர் இல்லத்தில் பெற்றோரை சேர்க்கும் அவல நிலை இருப்பதையும் காண முடிகிறது. அதற்கு தமிழ்நாட்டில் பெருகிக் கொண்டிருக்கும் முதியோர் இல்லங்களின் எண்ணிக்கையே சாட்சி.

முதியோர் இல்லங்களில் இருக்கும் ஒவ்வொருவரின் உள்ளங்களிலும் ஆறாத காயம் ஒன்று இருக்கத்தான் செய்கிறது. அந்த துயர நினைவுகளுடன் கடைசி கால நாட்களை கணத்த இதயத்தோடு கடந்து கொண்டுதான் இருக்கிறார்கள். சர்வதேச அன்னையர் தினமான இன்று பிள்ளைகளாகிய ஒவ்வொருவரும் உறுதிமொழி ஒன்றை எடுத்துக்கொள்வது காலத்தின் கட்டாயமாகும். 'இளம் வயதில் அன்னமிட்டு அன்பு காட்டி வளர்த்த அன்னைக்கு முதிய வயதில் அதை இரண்டையும் திருப்பிக் கொடுப்போம்' என்பதுதான் அது. கடந்து வந்த காலங்களைவிட கடக்கப்போகிற காலங்களை நிம்மதியாக களிக்கச் செய்வோம். தாயை இழந்தவர்கள் இன்றைய நாளில் அவர்களின் நினைவை போற்றுவோம்.

1 More update

Next Story