இன்ஸ்டகிராம் போலவே வாட்ஸ்அப் ஸ்டேட்டசில் வருகிறது சூப்பர் வசதி

இன்ஸ்டாகிராமில் இருப்பதைப் போல “குளோஸ் பிரண்ட்ஸ்” என்ற ஆப்ஷனும் வாட்ஸ்அப்பில் அறிமுகமாக உள்ளது.
ஸ்மார்ட்போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பிடித்து இருப்பது வாட்ஸ்அப். குறுஞ்செய்திகளை அனுப்பும் செயலியாக அறிமுகம் செய்யப்பட்ட வாட்ஸ்அப்பை பேஸ்புக்கின் மெட்டா நிறுவனம் கைப்பற்றிய பிறகு, பயனர்களை கவரும் விதமாக பல்வேறு அப்டேட்கள் கொண்டு வரப்பட்டன. குறிப்பாக வாட்ஸ்அப்பில் இமேஜ்கள், பிடிஎப் (PDF) பைல்களை பகிரும் வசதியும் கொண்டு வரப்பட்டது. அதன் பிறகு ஸ்டேட்டஸ் வைக்கும் வசதியை வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியது. வாட்ஸ்அப் பயனர்கள் இடையே இந்த வசதி பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் இருப்பதைப் போல “குளோஸ் பிரண்ட்ஸ் (Close Friends)” என்ற ஆப்ஷனும் வாட்ஸ்அப்பில் அறிமுகமாக உள்ளது. இன்ஸ்டாகிராமில் இந்த வசதியை பயன்படுத்தி வேண்டியவர்களுக்கு மட்டும் ஸ்டோரீஸ் தெரிவது போல அமைத்துக்கொள்ள முடியும் . இதேபோன்றதொரு வசதியைத்தான் வாட்ஸ் அப்பிலும் மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது.
அதே நேரத்தில் வாட்ஸ்அப்பில், பயனர் வைக்கும் ஸ்டேட்டஸ்களை யாருக்கு காட்ட வேண்டும், யாருக்கு காட்டக்கூடாது என்பதைத் தேர்வு செய்யும் வசதி ஏற்கனவே இருக்கும் நிலையில், இனி வரவிருக்கும் அப்டேட்டில் அப்படி என்ன புதிதாக இருக்கப் போகிறது என்று சில நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதேபோல சில நெட்டிசன்கள் கூறுகையில், இன்ஸ்டகிராமில் எப்படி நெருங்கிய நண்பர்கள் என்பதை தனியாக எடுத்துக்காட்டுவது போல, வாட்ஸ் அப்பிலும் Close Friends என காட்டும் என்று பதிவிட்டு வருகிறார்கள்.