சர்வதேச மகளிர் தினம் உருவானது எப்படி?

கோபன்ஹேகன் மாநாட்டின்போது, மகளிர் தினம் கொண்டாடும் யோசனையையும், அதன் முக்கியத்துவத்தையும் கிளாரா ஜெட்கின் முன்வைத்தார்.
ஆண்களுக்கு நிகராக பெண்களும் இப்போது பல்வேறு துறைகளில் தடம் பதித்து வருகிறார்கள். பெண்களுக்கான உரிமைகள் கிடைக்க தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இதற்கான அடித்தளம் பல ஆண்டு கால போராட்டக் களத்தில் வேரூன்றி உள்ளது.
திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்கு வாய்ப்பு கிடைக்காமலும், ஆண்களுக்கு இணையான ஊதியம் கிடைக்காமலும், சம உரிமை கிடைக்காமலும் இருந்த காலத்தில் உரிமைகளுக்காக பல பெண்கள் போராடினார்கள். அவர்களில் முக்கியமானவர், மகளிர் தினம் உருவாக காரணமாக இருந்த கிளாரா ஜெட்கின்.
கிளாரா ஜெட்கின் ஜெர்மனியைச் சேர்ந்தவர். அவர் பிறந்த 1857-ம் ஆண்டு அமெரிக்காவின் நியூயார்க்கின் பல இடங்களில் பெண்களின் உரிமைகளுக்காக போராட்டங்கள் நடந்தன. அது மெல்ல மெல்ல உலகம் முழுவதும் பரவத் தொடங்கியது. அதைப் பார்த்து வளர்ந்த கிளாராவுக்கு சிறு வயதிலேயே போராடும் குணம் உருவானது. சிறு வயதிலேயே பல போராட்டங்களில் பங்கேற்றார். மேலும், பெண்களின் உரிமையை நிலைநாட்டும் நோக்கில் படித்து வழக்கறிஞரானார். ஜெர்மனியின் சோசலிச கட்சியில் இணைந்து மகளிரணியின் தலைவராக உயர்ந்தார். பெண்கள் வீட்டை விட்டு வெளியே வராத அந்தக் காலத்திலே பாரிஸ் நகரில் 15 ஆயிரம் பெண்களைத் திரட்டி, பெண்களுக்கு சம உரிமை வழங்க கோரியும், ஊதிய உயர்வுக்காகவும், ஒரு நாளுக்கு 8 மணி நேரம் மட்டுமே வேலை நேரம் என்பதை வலியுறுத்தியும் பேரணி நடத்தினார். இதனால் அவர் புகழ் உலகெங்கும் பரவத் தொடங்கியது.
உலகம் முழுவதும் பெண்களின் போராட்டம் தீவிரமாக நடந்தபோது 1910-ம் ஆண்டு கோபன்ஹேகனில் 'சர்வதேச பெண்கள் மாநாடு' நடைபெற்றது. 17 நாடுகளைச் சேர்ந்த பிரமுகர்கள் கலந்துகொண்ட அந்த மாநாட்டில் கிளாராவும் பங்கேற்றார். இந்த மாநாட்டில் மகளிர் தினம் கொண்டாடும் யோசனையையும், அதன் முக்கியத்துவத்தையும் முன்வைத்தார். அவருடன் ஜெர்மனி குழுவில் இடம்பெற்றிருந்த கேத் டன்கர், பவுலா தியட் உள்ளிட்ட பலரும் இதனை முன்மொழிந்தனர். இதை அனைவரும் வரவேற்றனர். இருப்பினும் மகளிர் தினம் எந்த தேதியில் கொண்டாடப்படவேண்டும் என்பது குறிப்பிடப்படவில்லை.
இந்த மாநாடு, சர்வதேச மகளிர் தின கொண்டாட்டங்களுக்கு வழிவகுத்தது. 1911-ம் ஆண்டு மார்ச் 19-ல் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் மகளிர் தின கொண்டாட்டங்கள் நடைபெற்றன. குறிப்பிட்ட தேதி அறிவிக்கப்படாததால் ஒவ்வொரு நாட்டிலும் வேறுவேறு நாட்களில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.
1975 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை மார்ச் 8-ம் தேதியை சர்வதேச மகளிர் தினமாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்து, மகளிர் தினத்தின் உலகளாவிய முக்கியத்துவத்தை உறுதிப்படுத்தியது. அதன்பின்னர் உலகம் முழுவதும் மார்ச் 8-ம் தேதி மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.