செஞ்சி கோட்டைக்கு உலக பாரம்பரிய அந்தஸ்து: 834 ஆண்டு கால வரலாற்றை கொஞ்சம் திரும்பி பார்ப்போமா..!

தமிழ் மண்ணை ஆண்ட மன்னர்களின் வாழ்க்கை அடையாளமாக விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி கோட்டை கம்பீரமாக இன்றும் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது.
செஞ்சி,
தமிழகம் முழுவதும் பழமைவாய்ந்த கோவில்கள் நூற்றுக்கணக்கில் இருப்பதை நாம் பார்த்திருக்கிறோம். சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் காலத்தில் கலைநயத்துடன் இந்த கோவில்கள் கட்டப்பட்டிருந்தாலும், இந்த மன்னர்கள் வாழ்ந்த அரண்மனைகள், கோட்டைகள் ஒன்றுகூட இருந்ததாக தெரியவில்லை.
ஆனால், தமிழ் மண்ணை ஆண்ட மன்னர்களின் வாழ்க்கை அடையாளமாக விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி கோட்டை கம்பீரமாக இன்றும் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. 834 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்த கோட்டை, தமிழக மன்னர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் ஒரே அடையாளமாக இருப்பது நமக்கெல்லாம் பெருமை. தர்பார் மண்டபம், அந்தப்புரம், படைவீடுகள், யானை மண்டபம், குதிரை லாயங்கள், மாட மாளிகைகள், கோவில்கள், தானியக் களஞ்சியங்கள், உடற்பயிற்சி கூடம், பீரங்கி மேடை, வெடிமருந்து கிடங்கு, தோரண வாயில்கள், காவல் அரண்கள், பாதாள சிறை, மதில் சுவர், அகழி என ஒரு கோட்டைக்கான அத்தனை அம்சங்களையும் ஒருங்கே கொண்டுள்ளது, செஞ்சிக் கோட்டை.
இதன் வரலாற்றை புரட்டிப் பார்த்தோம் என்றால், சோழ மன்னர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு செஞ்சி எழுச்சி பெற்றுள்ளது. புதுச்சேரிக்கும், திருவண்ணாமலைக்கும் இடையே இன்றைக்கு சிறு நகரமாக இருக்கும் செஞ்சி, முந்தைய காலத்தில் ஆந்திராவின் நெல்லூரில் இருந்து தஞ்சாவூர் வரை பரவியிருந்த நெடுநிலத்தின் தலைநகரமாக விளங்கியுள்ளது. அதுவும் செல்வ செழிப்போடு இருந்த செஞ்சியை பார்த்த போர்ச்சுகீசிய மதபோதகர் ஒருவர், "நான் இந்தியாவில் கண்ட நகரங்களில் செஞ்சி மிகவும் சிறப்பு வாய்ந்தது" என்று கூறியிருப்பதில் இருந்தே, செஞ்சியின் அழகையும், செழிப்பையும் நாம் அறிந்துகொள்ளலாம்.
செஞ்சி கோட்டையை ஐரோப்பியர்கள் "கிழக்கு உலகத்தின் டிராய் கோட்டை" என்றே வர்ணித்தனர். சுற்றிலும் 4 மலைகள், அதன் உச்சியில் ராஜகிரி, கிருஷ்ணகிரி, சந்திராயன் துர்க்கம், சங்கிலி துர்க்கம் என கோட்டைக் காவல் அமைப்புகள், இந்த மலைகளின் மீது பிரமாண்டமாக மலைப்பாம்பு போல நீளும் கோட்டைச்சுவர். இதுவே செஞ்சி கோட்டையின் கம்பீரம். இந்த மலைகளுக்கு மத்தியில் கீழ்க்கோட்டை உள்ளது. இங்கு சிவன் கோவில், வேணுகோபால சுவாமி கோவில், வெங்கடரமணர் கோவில் உள்பட பல கோவில்கள் இருக்கின்றன.
கீழ்க்கோட்டை பகுதியில் பிரமாண்ட தானியக் களஞ்சியம் உள்ளது. 3 அறைகளாக பிரிக்கப்பட்டுள்ள இதில், தானியங்களை சேமித்துவைத்துவிட்டால், கோட்டைக்கு வெளியில் எதிரிகள் ஆண்டு கணக்கில் முற்றுகையிட்டாலும் வெளியே வராமல் சமாளித்துவிடலாம்.
செஞ்சி கோட்டையை கட்டியது, கோன் வம்ச அரசர்கள். இந்த வம்சத்தின் முதல் மன்னரான ஆனந்தக் கோன் செஞ்சி கோட்டையை கட்டியதாக கூறப்படுகிறது. அதன்பிறகு வந்த மன்னர்கள் அந்தக் கோட்டையை மேம்படுத்தினர்.
அதன்பிறகு, கோன் வம்ச அரசர்களிடம் இருந்து செஞ்சியை கைப்பற்றிய விஜயநகரப் பேரரசு நாயக்க மன்னர்கள் சுமார் 200 ஆண்டுகள் செஞ்சியை ஆண்டனர். அவர்கள் ஆட்சி காலத்தில்தான் கோவில்கள், கல்யாண மகால், கோட்டை மதில் அரண், கொத்தளங்கள் உள்ளிட்டவைகள் கட்டப்பட்டுள்ளன. இப்படி செஞ்சிக் கோட்டையே காணக்கிடைக்காத பொக்கிஷமாக மிளிர்ந்த நேரத்தில், பீஜப்பூர் சுல்தான், நாயக்கர்களை தோற்கடித்து செஞ்சி நகரையே சூறையாடினர். பிறகு, அவர்களிடம் இருந்து மராட்டிய மன்னர் சிவாஜி செஞ்சி கோட்டையை கைப்பற்றினார்.
செஞ்சி கோட்டையை சுற்றிப்பார்த்த சிவாஜி, "மராட்டிய மண்ணில்கூட இவ்வளவு பாதுகாப்பான கோட்டை இல்லை" என்று சிலாகித்து கூறியதுடன், கோட்டையை மேலும் பலப்படுத்தினார். அவரது மறைவுக்கு பிறகு மராட்டியத்தில் தோல்வி அடைந்து ஓடிவந்த அவரது மகன் ராஜாராமுக்கு அடைக்கலம் கொடுத்தது செஞ்சி கோட்டைதான். அதன்பிறகு, முகலாயப் பேரரசர் அவுரங்கசிப் செஞ்சி கோட்டையை கைப்பற்றினார்.
முகலாயர்கள் ஆட்சி காலத்தில் செஞ்சி நகரை நிர்வாகம் செய்தவர், சொரூப் சிங். இவரது மகன் தேஜ் சிங். இவரைத்தான் ராஜா தேசிங்கு என்று பின்னாளில் அழைத்தார்கள். தந்தை சொரூப் சிங் மறைவுக்கு பிறகு, 22 வயதேயான ராஜா தேசிங்கு செஞ்சி நிர்வாகத்தை கவனித்தார். இவரது நிர்வாகத்தின் கீழ் செஞ்சி இருந்தது 10 மாதங்கள் மட்டுமே.
ஆற்காடு நவாப்பிடம் ராஜா தேசிங்கு வீழ்ந்தார். அதன்பிறகு, ஆங்கிலேயர்கள், பிரெஞ்சுக்காரர்கள் வசம் செஞ்சிக் கோட்டை சென்றது. பிரெஞ்சுக்காரர்களிடம் இருந்து கடைசியாக ஆங்கிலேயர்கள் கைப்பற்றியது செஞ்சிக் கோட்டையைத்தான். ஆங்கிலேயர்கள் ஆட்சிக்கு பிறகு, செஞ்சிக் கோட்டை சுதந்திர இந்தியாவின் வசம் ஆனது. இதுதான் செஞ்சிக் கோட்டையின் நீண்ட நெடிய வரலாறு.
பல்வேறு ஆச்சரியங்களை தாங்கி இன்றைக்கும் அடையாளமாக விளங்கும் செஞ்சிக் கோட்டைக்கு, இப்போது யுனெஸ்கோ அமைப்பு உலக பாரம்பரிய அந்தஸ்து வழங்கி பெருமைப்படுத்தியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை யுனெஸ்கோ தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இனி செஞ்சிக் கோட்டையின் பாரம்பரியம் உலக அளவில் பரவும். தற்போது, சுற்றுலா பயணிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் பார்வை செஞ்சி கோட்டையை நோக்கி திரும்பியிருக்கிறது.